2025 மே 24, சனிக்கிழமை

’கல்வி அமைச்சால் தமிழர் பகுதிகள் சுவீகரிக்கப்படுகின்றன’

வா.கிருஸ்ணா   / 2017 ஓகஸ்ட் 06 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

"கல்வி அமைச்சின் மூலம், தமிழர் பகுதிகள் எல்லாம், பௌத்தத்தின் பெயரால் சுவீகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இது பாரிய நெருக்கடியை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்" என, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட நாவற்கேணி கண்ணகி வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள சரஸ்வதி சிலையும் சுற்றுமதிலும் திறந்துவைக்கும் நிகழ்வு, நேற்று (05) நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் அருட்பணி வி.சிறிபலராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக, சீ.யோகேஸ்வரன் கலந்துகொண்டார். இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், "இந்த நாடு, சகல மக்களும் வாழும் சமத்துவமான நாடாக அமையவேண்டும். குறித்த மதம்சார்ந்த நாடாக, இந்த நாடு இருக்கக்கூடாது. ஒரு குறித்த இனத்தின் நாடாக இருக்கக்கூடாது.

"இந்தியாவில் 82சதவீதம் இந்துக்கள் உள்ளனர். அந்த நாடு, இந்து நாடு என்று சொல்லப்படவில்லை. இந்து மதத்துக்கு அந்த நாட்டில் முன்னுரிமை இல்லை.அனைத்து மதங்களும் சமமாக மதிக்கப்படுகின்றன. தமிழ் நாட்டில், பெரும்பான்மையாக இந்துக்கள் இருக்கின்றபோதிலும், ஏனைய மதங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. தொழில் வழங்குவதில்கூட, அவர்களுக்கு விசேட சலுகை வழங்கப்படுகின்றது.

"இந்த நாட்டைப் பொறுத்தவரையில் தமிழ், முஸ்லிம் இனங்கள், இந்த நாட்டின் தேசிய இனங்கள். ஆகவே 40ஆவது அரசியல் ஆண்டை பூர்த்திசெய்துள்ள பிரதமர், 41ஆவது ஆண்டு வருவதற்கு முன்பாக, இந்த நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில், சகல இனமக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஓர் அரசியல் தீர்வை வழங்கவேண்டும்.

"கல்வி அமைச்சிடம், தற்போது தொல்பொருள் சார்ந்த விடயங்களும் கையளிக்கப்பட்டுள்ளன. முன்னர் மரபுரிமை அமைச்சின் கீழ் இருந்தது. இன்று கல்வி அமைச்சு, வடக்கு, கிழக்கில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தங்களது அடையாளங்கள் உள்ளதாக மையப்படுத்தி, தொல்பொருளாக பிரகடனப்படுத்தும் செயற்பாட்டை மேற்கொண்டுவருகின்றது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

"வடக்கு, கிழக்கில், முன்னர் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள். முன்னைய காலத்தில் இந்துக்கள், பௌத்தத்தைநேசித்தார்கள். பௌத்தர்கள், இந்துக்களை நேசித்தார்கள். தமிழர்கள், பௌத்தர்களாக இருந்தார்கள். பௌத்தர்கள், தமிழை நேசித்தார்கள். எந்தவித பாகுபாடுமின்றி இருந்தார்கள்.

"அந்தவேளையில், வடக்கு, கிழக்கு, தமிழ் பேசும் மக்களின் பூர்வீக பகுதியாக இருந்தது. இதனை பிரித்தானியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால், இன்று கல்வி அமைச்சு, வடக்கு, கிழக்கில் தொல்பொருள் என்ற பெயரில், பௌத்த மக்கள் வாழாத பகுதியை அவர்களின் வாழ்விடங்களாகப் பிரகடனப்படுத்தி, அவர்களின் தொல்பொருள் சின்னங்களை ஆதாரப்படுத்திவருகின்றது.

"எங்கு ஒரு தொல்பொருள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதனை பௌத்ததுக்கு உரியது என்று சொல்கின்றது. அதற்கு உறுதுணையாக, பௌத்த பிக்குகள் இருந்துவருகின்றார்கள்.

"தொல்பொருள் என்ற பெயரில், தமிழர்களின் பகுதிகளில் பௌத்ததை ஆதிக்கப்படுத்தி அடையாளப்படுத்துவதை, நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்" என்று அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X