2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

களுவாஞ்சிகுடியில் கவனஈர்ப்பு போராட்டம்

Niroshini   / 2016 ஜூலை 02 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் அசமந்த போக்குடன் நடந்து கொள்ளவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி  இன்று சனிக்கிழமை ( 02) களுவாஞ்சிகுடியில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலத்தில் கல்வி பயின்று வந்த மேகநாதன் மோகவர்மன் (வயது 07) என்ற மாணவன் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 15ஆம் திகதி   மட்டடக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  உயிரிழந்தார். இவ் உயிரிழப்புக்கு  வைத்தியர்களின் கவனக்குறைவே காரணம் எனக் கோரியே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட உயிரிழந்த மாணவனின் தந்தை மேகநாதன் கருத்து தெரிவிக்கையில்,

“எனது மகன் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டு பல மணித்தியாலங்கள் கழிந்த நிலையிலும்  எவ்வித சிகிச்சைகளும் அளிக்கப்படவில்லை. பின்னர் எனது மகன் வயிற்றுவலி காரணமாக அவதியுற்ற போதும் வைத்தியர்கள் அவ்விடத்திற்கு காலந்தாழ்த்தியே வருகைதந்தனர்.

வருகை தந்த வைத்தியர்கள் பெரிய வைத்தியருடன் தொலைபேசியில் உரையாடிய வண்ணமே வைத்தியத்தினை மேற்கொண்ட வண்ணம் காணப்பட்டனர். ஆனால் எனது பிள்ளையை காப்பாற்ற முடியவில்லை. வைத்தியர்களின் அசமந்த போக்கே எனது பிள்ளையின் உயிரிழப்புக்கு காரணம். இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது போன்று வேறொருவருக்கும் நடைபெறக் கூடாது” என  தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு  நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோர் வருகை தந்திருந்தனர். அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சரிடம் எடுத்துக் கூறி சட்ட சடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X