2025 ஜூலை 23, புதன்கிழமை

காணி அபகரிப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பைத் தடுத்து நிறுத்துவதுடன், அபகரிக்கப்பட்ட தமது காணிகளை மீட்டுத்தருமாறு கோரி, வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்னால், இன்று (08) காலை ஒன்றுகூடிய பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது காணியை மீட்டுத்தருமாறு கோஷங்களை எழுப்பிய பொதுமக்கள், தமது பிரச்சினைகள் தொடர்பில், தமிழ் அரசியல்வாதிகள் பாராமுகமாக இருப்பதாகவும் கவலை தெரிவித்தனர்.

முறாவோடை, வாகனேரி, ஆலங்குளம், குகனேசபுரம், புணானை உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாகத் தமிழர்களின் காணிகள் ஏனைய சமூகத்தைச் சேர்ந்த சிலரால் அபகரிக்கப்படும் நிலையில், அதனைத் தடுக்க எந்த நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லையென, பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களின் துணையுடன், தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாகவும் அதனைத் தடுப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகள் யாரும் இதுவரையில் முன்வரவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.

கல்குடா தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள், தமது பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் நகர்ப்பகுதியில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் வாசுதேவனிடம் மகஜர் ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் கையளிக்கப்பட்ட போது, தன்னால் முடிந்த  நடவடிக்கைகளைத் தான் மேற்கொள்வதாக ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அவர் உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .