2025 மே 02, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை நாளை முதல் முழுமையாக இயங்கும்

Princiya Dixci   / 2021 மார்ச் 28 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் நடவடிக்கைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவ் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தெரிவித்தார்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொரோனா வைரஸ் தொற்றாளரக்ளுக்கான சிகிச்சை நிலையமாக இயங்கி வரும் நிலையில், அதற்கு புறம்பாக வைத்தியசாலையின் ஏனைய நடவடிக்கைகளான வெளிநோயாளர் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, கிளினிக் மற்றும் பற் சிகிச்சைப் பிரிவு என்பவற்றை மீள இங்கு ஆரம்பிப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசள குணவர்த்தன அனுமதி வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

அந்த வகையில், காத்தான்குடி சுகாதார வைத்தியர் அலுவலகத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் பற் சிகிச்சைப் பிரிவு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, நாளை முதல் (29) வெளிநோயாளர் பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, கிளினிக் என்பவற்றையும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார்.

நோயாளர்கள் தமக்கான சிகிச்சைகளை சிரமமின்றி இங்கு பெற்றுக் கொள்வதுடன், ஆரம்பிக்கப்படும் வைத்திய சேவைகளை பொறுமையுடனும் நேரத்தியாகவும் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வைத்தியசாலை நிர்வாகத்துக்கு பூரண ஒத்துழைப்புக்களையும் பொதுமக்கள் தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை சுமார் 1 வருடங்களுக்கும் மேலாக கொரோனா சிகிச்சை நிலையமாக செயற்பட்டு வரும் நிலையில், இங்கு ஏனைய வைத்திய சிகிச்சைகள் நிறுத்தப்பட்டு, வெளிநோயாளர் பிரிவு மாத்திரம் காத்தான்குடி நகர சபையின் பழைய கட்டடத்தில் இயங்கி வந்தது. இதனால் பல்வேறு சிரமங்களை நோயாளர்களும் பொதுமக்களும் எதிர்நோக்கி வந்தனர்.

இது தொடர்பாக அரசியல் பிரமுகர்கள் பொது நிறுவனங்கள் உட்பட பலரும் ஜனாதிபதி, பிரதமர், சுகாதாதர அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் என பலரின் கவனத்துக்கும் கொண்டு வந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X