2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘காத்தான்குடி நகரசபை ஆட்சி மு.கா வசப்படும்’

Editorial   / 2017 நவம்பர் 08 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

“எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் காத்தான்குடி நகரசபையின் ஆட்சியை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும்” என அக்கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.என். முபீன் தெரிவித்தார்.

காத்தான்குடி நகரசபை பிரதேசத்தின் அரசியல் முன்னெடுப்புகள் பற்றி அவர், இன்று (08) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

இதன்போது அவர் ​மேலும் தெரிவித்ததாவது,

“காத்தான்குடி பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கான ஆதரவுத்தளம் தற்போது அதிகரித்துள்ளது. அதேவேளை, நாம் தகுதியானவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டியுள்ளது.

“தங்களை ஆளப்போகின்றவர்கள், தகுதியானவர்களாகவும் திறமையானவர்களாகவும் இருக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

“அத்துடன், வெறும் வாய்ப்பேச்சில்லாமல், செயற்றிறன் கொண்டவர்களையே, மக்கள் விரும்புகின்றனர்.

“எனவே, ஒவ்வொரு வட்டாரங்களிலும் மிகத்திறமையான ஆற்றல் மிக்க வேட்பாளர்களை களம் இறக்குகின்ற போது, காத்தான்குடியின் நகர ஆட்சியை கைப்பற்றுவது, இலகுவான காரியமாக அமையும்.

“மேலும், கடந்த காலத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

“தற்பொழுது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் அயராத முயற்சியின் காரணமாக காத்தான்குடிக்கான பாரிய கழிவு நீர் முகாமைத்துவ செயற்றிட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

“சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குறித்த விடயத்துக்கான அமைச்சராக இருப்பதன் காரணமாகவே, இத்திட்டத்துக்கான அங்கிகாரம் கிடைத்துள்ளது.

“ஐக்கிய அமெரிக்க டொலர் 78,968,468.36 செலவில் மேற்படித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மிகப்பாரிய நிதியொதுக்கீட்டில் முதன்முதலில் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடியிலேயே, இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

“இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நகரசபை ஆட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கைகளுக்குக் கிடைக்க வேண்டும். காத்தான்குடியின் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு வீதியும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளது.

“எனவே, நமது ஊரின் முக்கிய தேவையை சரியான முறையில் நிறைவேற்றிக்கொள்ள காத்தான்குடி நகரசபை ஆட்சியை நாம் கைப்பற்ற வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .