2025 மே 01, வியாழக்கிழமை

காத்தான்குடி நிர்வாகப் பிரிவை மீள் நிர்ணயிக்க முன்மொழிவு

Princiya Dixci   / 2021 மார்ச் 11 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

தற்போதிருக்கும் காத்தான்குடி பிரதேச செயலக நிர்வாகப் பிரிவை மீள் நிர்ணயம் செய்து, அதனை இரண்டு பிரதேச செயலகப்  பிரிவுகளாக உருவாக்குவதற்கும் மேலும் புதிய கிராம அலுவலர் பிரிவுகளை உருவாக்கவும் முன்மொழியப்பட்டுள்ளதாக பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே பிரேரிக்கப்பட்டுள்ள இந்த யோசனை முன்மொழிவு அறிக்கையை, தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு ஆலோசனைக் குழுவின் தலைவருமான நஸீர் அஹமட்டிடம் சமர்ப்பித்துள்ளதாக 71 பள்ளிவாசல்களையும் 145 முஸ்லிம் நிறுவனங்களையும் உள்ளடக்கிய காத்தான்குடி சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய காத்தான்குடி பிரதேச  மக்கள் தொகை விநியோகம் இப்பகுதியின் புவியியல் மற்றும் தற்போதுள்ள நிர்வாக அமைப்பு ஆகியவற்றை கவனமாக ஆய்வு செய்து, ஆராய்ந்த  பின்னர் இந்த முன்மொழிவு தயாரிக்கப்பட்டுள்ளாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், கிராம அலுவலர் பிரிவுகளையும் சன அடர்த்திக்கேற்ப அதிகரிக்க வேண்டும் என்றும் சம்மேளனம் கேட்டுக் கொண்டுள்ளது.

மக்களின் குரலாக இருக்கும் தங்களது சம்மேளனம் அரசாங்கத் துறைகள் உள்ளூராட்சி அமைப்புகள், தேசிய மற்றும் உள்ளூர் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நாட்டில் உள்ள இராஜதந்திர பணிகள் ஆகியவற்றால் அங்கிகரிக்கப்பட்டதாகும்.

எனவே, காத்தான்குடியில் மேலும் பல கிராம அலுவலர் பிரிவுகள் உருவாக்கப்படுவதுடன், வேறு பிரதேச செயலகப் பிரிவுகளின் கீழ் வரும் கிராம அலுவலர் பிரிவுகளையும் இணைத்து இன்னுமாரு பிரதேச செயலகம் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் எனும் மக்களின் வேண்டுகோளை கரிசனையுடன் அணுகுமாறு, அந்த சம்மேளனம் கேட்டுக் கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .