2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’காலில் விழுந்து கெஞ்சும் போலி அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும்’

Suganthini Ratnam   / 2017 ஜூலை 13 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

பெரும்பான்மையிடம், சிறுபான்மை இனங்கள்  காலில் விழுந்து கெஞ்சுகின்ற போலியான அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும் என, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகளின் கீழ்,  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட 63.08 மில்லியன் ரூபாய் செலவிலான அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் முதலாவது நிகழ்வு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இன்று  நடைபெற்றது.

இவ்வைத்தியசாலையில் 7 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு, 10.4 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய நிபுணர் விடுதி ஆகியவற்றை திறந்துவைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'கிழக்கு மாகாணசபையில் கோலோச்சும் நாம்,  எதைச்; சாதித்துள்ளோம் என்று கேட்பவர்களுக்கு, பெரும்பான்மையினரின் காலில் விழுந்து கெஞ்சி அரிசியல் அதிகாரம் பெறும் நிலைமையை மாற்றியுள்ளோம் என்பதை நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன்' என்றார்.

'அரசியல் சாசனத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ள உரிமைகளைப் பெறுவதில் நாம் சாதனை படைத்துள்ளோம்.

'மாகாணசபைகளுக்கு காணி, சுகாதாரம் உட்பட எழுத்து மூலம் கொடுக்கப்பட்ட எத்தனையோ அரசியல் அதிகாரங்கள் இன்னமும் தரப்படாமல் கறுப்பு, வெள்ளையாகக் காட்சி தருகின்றன.

'போலியான அரசியல் கலாசாரத்துக்குள் அகப்பட்டு ஏமாரும் யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டாமல், நாம் போலிக் கௌரவத்துடன் காலம் கடத்த முடியாது.

'வேலையில்லாப் பிரச்சினை மற்றும் பட்டதாரிகளுக்காக அமைச்சர்களின் காரியாலங்களில் நாம் ஏறி இறங்குகின்றோம். உண்மையான அரசியல் அதிகாரம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டிருந்தால், பட்டதாரிகள் பாதையில் போராடும் தேவை இல்லை.  நாம் அமைசுக்களுக்கு ஏறி இறங்கவும் தேவை இல்லை' என்றார்.  

'மேலும் அங்கு உரையாற்றிய அவர், 'கிழக்கு மாகாணத்தில் அதிகாரப்பகிர்வு உடனடியாக அமுலாக வேண்டும்.

'ஏமாற்றப்பட்ட அரசியல் அனுபவத்தை நாம் தொடர்ந்து அங்கிகரிக்க முடியாது. சிறுபான்மையினருக்கு கண்ணியமான கௌரவம் வழங்கப்பட வேண்டும்.
'நாட்டு நடப்புகள் நம்பிக்கை தருவதாக இல்லாத போதும், நல்லாட்சியை ஏற்படுத்திய சிறுபான்மையினராகிய நாம், இன்னும் நம்பிக்கையைக் கைவிடவி;ல்லை.

'குழப்பவாதிகள் மும்முரமாக இருந்தாலும், எமது நம்பிக்கை அதை விடப் பலமாக இருக்கின்றது' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X