2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கிழக்கின் அபிவிருத்தியில் ‘அரசாங்கத்துக்கு கரிசனையில்லை’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 மே 07 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை அழிவுகளாலும் யுத்தத்தாலும் சிதைக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை, அங்குள்ள வளங்களைக் கொண்டே, அபிவிருத்தி செய்யக் கூடியதாக இருக்கிறது எனத் தெரிவித்த, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத், அதற்கு மத்தியிலும், அம்மாகாணம் தொடர்பில் அரசாங்கத்தின் கரிசனை இன்னும் கிடைக்கவில்லை என்பது, புரியாத புதிராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக, நேற்று  (06) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், 2 ஆண்டுகள் நீடித்த தனது மாகாண ஆட்சியின் போது, மாகாணத்தின் அபிவிருத்திக்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவை வெற்றியடையவில்லை என்று குறிப்பிட்டார்.
“கிழக்கில், எனது தலைமையிலான இரண்டரை வருட மாகாண ஆட்சி நிலவியபோது, முதலில் கிழக்கிலுள்ள உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி, கிழக்கு மாகாணம் முழுவதையும், மத்திய அரசாங்கத்துக்குப் பாரமில்லாமல் எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என்பது பற்றிய, சாத்திய வள ஆய்வுகளைச் செய்து, அறிக்கைகளைப் பெற்று, அவற்றை அரசாங்கத்துக்குச் சமர்ப்பித்தோம்.
“பல முன்மொழிவுகளைச் செய்தோம். ஆனால், அவை எதுவும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவே கருதவேண்டியுள்ளது" என்று குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள மூவினத்தவர்களுக்கும் பயன்தரக்கூடிய, மூன்று தொழிற்பேட்டைகளை உருவாக்கி, பல்லாயிரக்கானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் முன்மொழிவும் காணப்பட்டது என, அவர் தெரிவித்தார்.
ரயில் பாதையை விஸ்தரித்தல், அதிவேக நெடுஞ்சாலை, பொலன்னறுவைக்கும் மட்டக்களப்புக்குமிடையில் சர்வதேச விமான நிலையமொன்றை நிறுவுதல் என்பன, தமது ஆட்சியில் முன்மொழியப்பட்டவற்றில் ஏனைய சில திட்டங்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அத்துடன், உள்ளூர் இயற்கை வளங்கள் மற்றும் மனித வளங்களைப் பயன்படுத்தி உச்சப் பயனைப் பெறும் வகையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டம் சார்ந்த முன்மொழிவுகள், அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டன. இவற்றில், எதனையும் அரசாங்கம் கண்டு கொள்ளாத நிலைப்பாடு தொடர்ந்து அவதானிக்கப்பட்டு வருகிறது.
“இந்த விடயங்கள் கரிசனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமாக இருந்தால், கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகளின் வேலையில்லாத் திண்டாட்டம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. அத்துடன், வளப்பங்கீடு இடம்பெறுவதோடு, தேசிய உற்பத்தியிலும் கிழக்கு மாகாணம், கணிசமான பங்களிப்பைச் செலுத்த முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X