2025 மே 22, வியாழக்கிழமை

‘கிழக்கு மாகாண கல்வி நிலையில் மகிழ்ச்சி இல்லை’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கிழக்கு மாகாணத்தின் ஆரம்பக் கல்வி நிலைமை, ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் மகிழ்ச்சி தருவதாக இல்லை” என்று, கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

மட்டக்களப்பு வின்சண்ட் மகளிர் உயர்தர பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு வைபவம், செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்.

“ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வைத்து மாகாண ரீதியாக தரப்படுத்தினால், கிழக்கு மாகாணத்தின் பெறுபேற்று நிலையானது,  கடந்த 2015ஆம் ஆண்டு 63 சதவீதமாகவும் 2016ஆம் ஆண்டு 61 சதவீதமாகவும் காணப்படுகின்றது.

“இந்த நிலைமைகளைப் பார்க்கின்ற போது, இங்கு ஆரம்பக் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

“ஆரம்பக்கல்வி அபிவிருத்தி வேலைகளுக்காக பல வேலைத்திட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்று வருகின்றன. ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் பெறுபேறுகளில் நாங்கள் பின்தங்கிய நிலையில் இருக்கின்றோம்.

“மட்டக்களப்பு வின்சண்ட மகளிர் உயர்தர பாடசாலை போன்ற பிரபல்யமான பாடசாலைகள், சராசரியைவிட அதிகமான நிலைமையைப் பெறுபேறுகளில் காட்டுகின்றார்கள். எனினும், பரவலான கல்வி வளர்ச்சி என்பது கிழக்கு மாகாணத்தில் இருக்க வேண்டுமென, கல்வியலாளர்களும் கல்வி அதிகாரிகளும் எதிர்பார்க்கின்றனர்.

“கிழக்கு மாகாணத்தில் கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சை பெறுபேறு நிலைமையும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு நிலைமை போன்றுதான் காணப்படுகின்றது.

“2015ஆம், 2016ஆம் ஆண்டுகளில், உயர்தரத்துக்கு சித்திபெறக் கூடிய மாகாணவர்களின் விகிதாசாரம் 61 சதவீதமாகதான் காணப்படுகின்றது. கடந்த இரண்டு வருடங்களிலேயே இந்தக் கீழ் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .