2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சுமார் 150 கூட்டுறவுச்சங்கங்கள் செயலிழப்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 29 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 500 க்கும் மேற்பட்ட கூட்டுறவுச் சங்கங்களில், 150 க்கும்  மேற்பட்ட சங்கங்கள் தற்போது செயலிழந்து காணப்படுவதாக மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எஸ்.கிருபைராஜசிங்கம் தெரிவித்தார்.

கூட்டுறவுச்சங்க அங்கத்தவர்களின் பங்களிப்பின்மையும்  சேவை மனப்பான்மையும் குறைந்துவருவதே  கூட்டுறவுச் சங்கங்கள் செயலிழந்துள்ளமைக்கு காரணமெனவும் அவர் கூறினார்.

மேலும், கூட்டுறவுச் சங்கங்களைப் புனரமைப்பதற்காக இப்பொழுது  பயிற்சி வகுப்புகளும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளும் மாகாணமெங்கும் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், 2016ஆம் ஆண்டில் தெருக்கூத்துகள், வீதி நாடகங்கள் மூலமாகவும் கூட்டுறவுத்துறையைப் புனரமைப்பதற்கான விழிப்புணர்வூட்டல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கூட்டுறவு நடைமுறைச் சட்டங்கள், கூட்டுறவு அபிவிருத்தி, அதன் சேவைகள் பற்றிய விழிப்புணர்வுச் செயலமர்வு ஏறாவூர் வடக்கு, மேற்கு பலநோக்குக் கூட்டுவுறச்சங்க கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

கூட்டுறவுத் திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுச்சபையின் அனுசரணையுடன் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்திச் சபைத் தலைவர் ஆர்.இராயப்பு தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், சுமார் 150 கூட்டுறவு அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.  

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், சிக்கன கடனுதவி;, மீனவர் அபிவிருத்தி;, கால்நடை அபிவிருத்தி, கைத்தொழில், பாடசாலை கூட்டுறவுச் சங்கங்களென 34 வகையான கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன.
இவற்றில் அங்கத்துவம் வகித்து அக்காலத்தில் இக்கூட்டுறவுத்துறையை வழிநடத்தியவர்கள் தேடிவைத்த சொத்துக்களினாலேயே, இப்பொழுதும் கூட்டுறவுத்துறையில் கடமையாற்றுபவர்களும் பொதுமக்களும் நன்மை அடைகின்றனர்' என்றார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் எஸ்.கிருபைராஜசிங்கம், தலைமைக் காரியாலய கூட்டுறவு அபிவிருத்தி அதிகாரி எஸ்.அப்துல் காதர், கே.வேல்வேந்தன், ஏறாவூர் வடக்கு மேற்கு பலநோக்குக் கூட்டுறவுச்சங்க பொதுமுகாமையாளர் எஸ்.உதயநாயகி, பொதுச்சபை உபதலைவர் எம்.விஜயகுமார் உள்ளிட்டோரும் கூட்டுறவுச் சபை நிர்வாகிகளும் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X