2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

சந்தேகத்திற்குரிய மனித புதைகுழி ; ஸ்கேன் செய்ய உத்தரவு

Janu   / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - குருக்கள்மடம் பகுதியில் மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தை எதிர்வரும் மே மாதம் 14, 15, 16 மற்றும் 17ஆம் திகதிகளில் ஸ்கேனிங் (Scanning) செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1990ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்து கல்முனை வழியாக காத்தான்குடிக்கு சென்ற முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு, திங்கட்கிழமை (20) அன்றுகளுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பாதிக்கப்பட்ட தரப்பு சார்பாக முன்னிலையான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

"குருக்கள்மடம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மூன்று இடங்களில், ஏற்கெனவே இரண்டு இடங்களில் மாத்திரமே ஸ்கேனிங் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. எஞ்சிய ஒரு இடத்தில் ஸ்கேனிங் செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டி, கடந்த 31 அன்று இந்த வழக்கின் நேரடி முறைப்பாட்டாளரால் நீதிமன்றில் நகர்த்தல் பிரேரணை (Motion) ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. விடுபட்ட இடத்தை சோதித்த பின்னரே அகழ்வு  பணிகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், முறைப்பாட்டாளர் தனது சொந்த செலவில் தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக 'ஆடியோ ஃப்ரீக்வன்சி மேக்னடிக் டெலூரி' (Audio-frequency Magnetic Tellurics - AMT) எனும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்கேனிங் செய்ய நீதிமன்றம் திங்கட்கிழமை (20) அன்று அனுமதி வழங்கியுள்ளது. அங்கே மனித எச்சங்கள் ஏதேனும் காணப்படுமானால், அதனை அகழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இந்த வழக்கோடு தொடர்புடைய சட்ட வைத்திய அதிகாரி, காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP), தொல்லியல் திணைக்களம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு ஆகிய சகல தரப்பினருக்கும் இது குறித்து அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, மே மாதம் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை ஸ்கேனிங் மற்றும் அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன.

இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளது" என தெரிவித்தார்.

  .சக்தி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .