Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூலை 04 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் சுமார் ஆயிரம் இளைஞர், யுவதிகள் உற்பத்தித் தொழிற்றுறைக்காக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர் என, இலங்கை மத்திய வங்கியினுடைய வறுமை ஒழிப்புப் பிரிவின் குழுத் தலைவர் ஆர்.ஸ்ரீபத்மநாதன், இன்று தெரிவித்தார்.
ஏதாவதொரு உற்பத்தித்துறையில் தமக்குப் பயிற்சி தேவை என்ற வேண்டுகோள் சுயதொழில் உற்பத்தித் தொழில்துறையில் ஆர்வம் காட்டுவோரால் கூட்டாக முன்வைக்கப்படுமாயின், அவர்கள் தெரிவுசெய்யும் தொழில் துறைக்கான பயிற்சி இலங்கை மத்திய வங்கியினுடைய வறுமை ஒழிப்புப் பிரிவால் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இதுவொரு அரிய வாய்ப்பு என்பதுடன், இதனை வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள இளைஞர், யுவதிகளும் உற்பத்தித்துறை சார்ந்தோரும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'உள்ளூரில் தாராளமாக மூலப்பொருள் கிடைக்கும்போது, அது பற்றிய அக்கறையில்லாது, பொதுவாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற உற்பத்திப் பொருட்களின் நுகர்வோராக நாம் இருப்பதால், எமது பொருளாதாரமும் வளமும் வீணடிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதியளவு பால் கிடைக்கின்ற போதிலும், வெளியூர்களில் அல்லது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பாலுணவுகளின் நுகர்வோராக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உள்ளார்கள்.
அதேபோன்று ஏனைய அரிசி, மாப்பொருள் உற்பத்திகள், உப உணவு உற்பத்திப்பொருட்கள், மாசி, கடலுணவு, சவர்க்காரம் உட்பட அத்தியாவசிய மற்றும் அன்றாடப் பாவனைக்கான பொருட்களின் அநேகமான மூலவளங்கள் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அநேக பகுதிகளில் கிடைக்கின்றன.
ஆயினும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நுகரும் மோகம் இன்னமும் எம்மை விட்டு அகலவில்லை.
இதனை மாற்றுவதற்காகவே, இலங்கை மத்திய வங்கியினுடைய வறுமை ஒழிப்புப் பிரிவு உள்ளூர் வளங்களைக் கொண்டு சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களை உருவாக்கும்
பயிற்சிகளை மட்டக்களப்பு மாவட்டம் உட்பட வடக்கு, கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.
மூலப்பொருள்களை முடிவுப் பொருள்களாக மாற்றி, அதற்கான சந்தை வாய்ப்பையும் சிறந்த இலாபத்தையும் பெற்றுக்கொள்ள வழிகாட்டப்படுகின்றது.
உள்ளூரில் போதிய வளங்கள் இருந்தும், மட்டக்களப்பு மாவட்ட மக்களில் 80 சதவீதமானோர் வறுமைக்குட்பட்டவர்களாக அடையாளம்; காணப்பட்டிருக்கின்றார்கள்.
இது பற்றி இளைஞர், யுவதிகள், உற்பத்தித் துறைசார்ந்தோர், சமூக ஆர்வலர்கள், பொது நிறுவனங்கள் அக்கறை காட்டி உள்ளூர் வளங்களைக் கொண்டு அதி உச்ச பயனடைவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.
இதேவேளை தேசிய மொத்த உற்பத்திக்கான பங்களிப்பில் கிழக்கு மாகாணம் 7.8 சதவீதத்தையும் வடமாகாணம் 4.2 சதவீதத்தையும் மாத்திரமே அளிக்கின்றன.
தேசிய மொத்த உற்பத்திக்கான பங்களிப்பில் இலங்கையில் ஆகக்கூடியதாக 46 சதவீதப் பங்களிப்பை மேல் மாகாணம் எட்டியுள்ளது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
24 May 2025
24 May 2025