2025 மே 09, வெள்ளிக்கிழமை

தந்தை செல்வா காட்டிய வழியிலேயே சம்பந்தன் நகர்கிறார்: துரைராஜசிங்கம்

Thipaan   / 2015 டிசெம்பர் 26 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்  

தந்தை செல்வா காட்டிய வழியிலேயே எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவின் அரசியல் நகர்வுகள் இலங்கையில் மட்டுமல்ல ஐ.நா.சபையிலும் ஓங்கி ஒலிக்கின்றன  என கிழக்கு மாகாண விவசாய, மீன்பிடி, கால்நடை, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ச.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

காரணம், நிதானமாகப் பேசி முடிவுகளை எடுக்கக் கூடிய பலம் வாய்ந்த தீர்க்க தரிசனமாகச் செயற்படக் கூடிய தலைவரைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளமை தமிழர் இருப்புக்கு வலுச் சேர்த்துள்ளது என கூறினார்.

மட்டக்களப்பு, மகிழூர்முனை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில்  வியாழக்கிழமை (24) நடைபெற்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில்  அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தலைவனின் வழியினை நாம் மிகவும் சிறப்பான முறையில் முன்னெடுக்கின்றோம். இதனை உடைப்பதற்காக பல கட்சிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உதயமாகினாலும் தமிழ் மக்களின் மன உணர்வினை ஒரு போதும் மாற்றியமைக்க முடியாது.

சம்பந்தன் ஐயாவினால் பலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைக்கப்பட்டனர். இணைக்கப்பட்டவர்கள் வேறு யாருமல்ல தமிழ்ப் பற்றாளர்களே. 1960ஆம் ஆண்டுகளில் தந்தை செல்வா எமது தலைவரை கட்சியில் இணையுமாறு அழைத்தாலும் 1975ஆம் ஆண்டுதான் சம்பந்தன் ஐயா தமிழர்களுக்கு உரித்தான கட்சியில் இணைந்து அன்று முதல் இன்று வரை தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை, இராஜதந்திரமான முறையில் தீர்த்து வைக்கக் கூடிய வகையில் தலைவனின் முன்னெடுப்புக்கள் நடைபெறுகின்றன.

 நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கின்றார் விக்கி எனும் சுனாமியினால் சம்பந்தன் தடுமாறுகின்றார் என்று அவருடைய கூற்றினை ஏற்றுக் கொள்ள முடியாது.

புத்திஜீவிகள் எனும் போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசியல் கற்பிக்க சிலர் முனைகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்  புத்திஜீவிகளுக்கு இடமில்லை தொண்டர்களுக்கு மாத்திரமே இடமுண்டு, இதனை அரசியல் கற்பிக்க முனைகின்ற தமிழ்க் கட்சிகளின் புத்திஜீவிகள் உணர வேண்டும். கட்சியினை நேசிக்கின்றவர்களினால் மாத்திரமே கட்சியை வளர்க்க முடியும்.

அரசு எனும் கட்டமைப்பிலிருந்து விலகிவிட முடியாது காரணம் எங்களால் ஆக்கப்பட்ட அரசாங்கத்தின் மூலமாக மக்களின் தேவைகள், குறைநிறைகளை நிவர்த்தி செய்ய முடியும்.

அதன் காரணமாகத்தான் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற  நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் தலைவர் சம்பந்தன் ஐயாவின் கொள்கைப்படியே செயற்படுவோம். எனக்குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X