2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டியது தலையாய கடமையாகும்

Niroshini   / 2017 ஜனவரி 07 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, வடிவேல் சக்திவேல்

“தமிழ் மக்களையும் தமிழையும் கொச்சைப்படுத்துகின்ற பாதிக்கின்ற செயற்பாடுகளிலும் அதனை அழிக்க வேண்டும் என்ற செயற்பாடுகளிலும் வேற்று இனத்தவர்கள் மிகவும் தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்” என, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

பாண்டிருப்பு அகரம் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் செ.துஸ்யந்தனின் “விருந்து” எனும் நூல் வெளியீடானது நேற்று மாலை கல்முனை தமிழ் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

அன்று பாரதியார் கூறிய படி தமிழர்கள் எட்டுத் திசைகளுக்கும் சென்று தமிழையும் தமிழர்களது கலை, கலாசார, பண்பாடுகளையும் எடுத்துச் சென்று மற்றவர்களுக்கு சொல்லி நிலைநிறுத்த வேண்டிய கடமைப்பாடு எமக்கு இருக்கின்றது.

தமிழ் மொழியானது மிகவும் செம்மையானதும் முதுமையானதுமான மொழியாக இருப்பதனால் அதனை பாதுகாக்க வேண்டியது எமது அனைவரினதும் ஒட்டுமொத்த தலையாய கடமையாகவும் இருக்கின்றது.

விசேடமாக எமது ஈழத்து மண்ணிலே வட-கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற எமது தமிழர்கள் தமிழ் கலாசாரங்களை பின்பற்ற வேண்டும். மாறாக மேலத்தேய கலை கலாசாரங்களுக்குள் தங்களை ஈடுபடுத்தாமல் எமது கலாசாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாழப் பழகிக்கொள்வதுடன், அனைவரும் விழிப்பாக இருந்து செயற்பட வேண்டும்.

இன்று தமிழர்களது வரலாறுகள் திரிவுபடுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது குறிப்பாக கல்முனையில் கூட எமது வரலாறுகள் திரிவுபடுத்தப்பட்டு வருகின்றது. இந்த விடயத்தில் நாங்கள் அவதானமாக செயற்படவேண்டும். கல்முனையை பொறுத்த வரையில் அன்று தமிழ் மன்னன்தான் இதனை ஆண்டிருக்கின்றான். ஆனால், அதனை வேறுவிதமாக திரிவுபடுத்தி சொல்லப்படுகின்ற நிலைதான் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதனை தடுத்து நிறுத்தி எமது பூர்வீக வரலாறுகளையும் உண்மையான வரலாறுகளையும் எமது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டுமாக இருந்தால் இவ்வாரான சஞ்சிகைகளில் எமது வரலாறுகள் தொடர்பான ஆவணங்கள் அமையப் பெற்றிருப்பதோடு, கல்வி சம்பந்தமான விடயங்களும் அமையப்பெற வேண்டும் அவ்வாறு அமையப்பெறுகின்ற போதுதான் எமது மக்கள், மாணவர்கள் அதனை கற்று அதன்மூலம் உண்மைகளை கற்றுக்கொள்வார்கள்.

தமிழ் மொழியானது மிகவும் பழமையானதும், செம்மையானதும், முதன்மையானதுமான மொழி இந்த மொழி அருகிப்போகக்கூடாது என்ற காரணத்தினால்த்தான் ரசியாவின் மாளிகையில் கூட தமிழ் எழுத்து பொறிக்கப்பட்டிருக்கின்றது.

அவ்வாறு மிகவும் தொன்மை வாய்ந்த தமிழ் மொழியினை பேணி பாதுகாத்து எமது அடுத்த சந்ததியினருக்கு கடத்த வேண்டிய பொறுப்பு அனைவரிடமும் இருக்க வேண்டும் எனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X