Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில், கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், தமது வீடுகளை விட்டு வெளியேறி, உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சம் நிலவி வரும் இக்காலகட்டத்தில் மக்கள் மிகப்பெரும் அசௌகரியத்தை தற்போது எதிர்நோக்கி வருகின்றனர்.
முன்னதாக, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சிக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருந்தது.
இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (22) காலை 8.30 மணி வரையான 48 மணித்தியாலங்களில் 341 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாகவும், ஆகக்கூடியதாக வாகனேரிப் பகுதியில் 214.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் மட்டக்களப்பு வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்தார்.
புதிய காத்தான்குடி, நாவற்குடா, ஆரையம்பதி, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, கிரான் உட்பட பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, புதிய காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அத்துடன், களுதாவளை, களுவாஞ்சிகுடி, மகிளுர், குருமண்வெளி, கிராங்குளம், எருவில், வெல்லாவெளி, கோவில்போரதீவு, பெரியபோரீவு, வெல்லாவெளி, பழுகாமம் உள்ளிட்ட பல இடங்களிலுள்ள சிறிய குளங்கள் நீர் நிரம்பியுள்ளன. அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான பெரிய குளங்களின் நீர் மட்டங்களும் உயர்ந்துள்ளதுடன், சில குளங்களின் வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதாக, நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, மாளிகைக்காடு, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால், சில இடங்களில் பொதுமக்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி வருகின்றனர். பொலிவேரியன் புதிய குடியிருப்புக் கிராமம் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகிறது.
அத்துடன், வீதிகளில் வெள்ளம் தேங்கி நிற்பதுடன், பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். கல்முனையையும் கொலனிப் பகுதிகளையும் இணைக்கும் கிட்டங்கிப்பால வீதி மற்றும் கல்முனை- அம்பாறை நெடுஞ்சாலையிலுள்ள மாவடிப்பள்ளி பாலம் என்பவற்றுக்கு மேலாக வெள்ள நீர் பாய்ந்தோடுவதால் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த வெள்ள நிலைமையை கருத்திற்கொண்டு, இன்று (22) அப்பகுதிகளிலுள்ள முகத்துவாரங்கள் திறப்பட்டு, வெள்ள நீரை கடலுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் அபாய சூழ்நிலைக்கு மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் கடற்றொழில், விவசாயம் மற்றும் வியாபார நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் திண்டாட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
(எம்.எஸ்.எம்.நூர்தீன், அஸ்லம் எஸ்.மௌலானா, ரீ.எல்.ஜவ்பர்கான், சகா, எம்.என்.எம்.அப்ராஸ், நூருல் ஹுதா உமர், வ.சக்தி, எம்.எம்.அஹமட் அனாம், எம்.எஸ்.எம். ஹனீபா, வா.கிருஸ்ணா, ஏ.எல்.எம். ஷினாஸ், ஆர்.ஜெயஸ்ரீராம், பாறுக் ஷிஹான், வ.திவாகரன்)
6 minute ago
10 minute ago
24 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
24 minute ago
25 minute ago