Janu / 2026 மே 05 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலகாமம் வன்முறைச் சம்பவத்திற்கு எதிராகக் கொழும்பில் செவ்வாய்க்கிழமை (05) அன்று நடைபெற்ற போராட்டத்தின் முக்கிய அம்சமாக, ஜனாதிபதி செயலகத்தில் போராட்டக் குழுவினரால் மகஜரொன்று கையளிக்கப்பட்டது.
இரத்தினபுரி - காவத்தை, நீலகாமம் தோட்டத்தில் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி, தலைக்கவசம் அணிந்த குழுவொன்று அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த குடியிருப்பொன்றைப் பலவந்தமாக அகற்றி, அதில் வாழ்ந்து வந்த இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தது. இத்தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பினை வெளியிட்டு மலையகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் செவ்வாய்க்கிழமை (05), இதனை அடிப்படையாகக் கொண்டு 'நாம் மலையகம்' அமைப்பினால் 'நாம் நீலகாமம்' எனும் தொனிப்பொருளில் கொழும்பு - ஐந்துலாம்புச் சந்தியில் அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
'தோட்டங்களில் கூலிப்படை எதற்கு?', 'அஞ்சோம் அடிபணியோம்', 'எங்கள் மண்; எங்கள் உரிமை', 'வீழ்வோம் என நினைத்தாயோ?' என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டம் தொடர்ந்தது. இதன்போது 'நாம் மலையகம் தீர்மானம்' வாசிக்கப்பட்டதோடு, அது போராட்ட ஏற்பாட்டுக் குழுவால் ஜனாதிபதி செயலகத்திலும் கையளிக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி, குறித்த தீர்மானத்துக்கமைய எதிர்வரும் 21 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வு வழங்கப்படாவிட்டால், இவ்விடயத்தைச் சர்வதேசம் வரை எடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகப் போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட 'நாம் மலையகம்' அமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் அருண் பிரசாத் பின்வருமாறு தெரிவித்தார்:
"கடந்த 22ஆம் திகதி காவத்தை - நீலகாமம் பிரதேசத்தில் ஓய்வுபெற்ற இராணுவத்தினரைக் கொண்ட குழுவை வைத்து, அந்தத் தோட்ட நிர்வாகம் அங்குள்ள மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. தாமே அவர்களைப் பாதுகாப்புப் பணிக்கமர்த்தியுள்ளதாகத் தோட்ட நிர்வாகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. பாதுகாப்புப் பணிக்கமர்த்தப்பட்டிருப்பவர்கள் அந்தப் பணிகளில் மாத்திரமே ஈடுபட வேண்டும்.
ஆனால், அவர்கள் முழுமையாக முகத்தை மறைக்கும் தலைக்கவசத்தை அணிந்துகொண்டு, அங்குள்ள அப்பாவி மக்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களில் இருவர் காயமடைந்துள்ளனர். அவர்களது குடியிருப்புகளும் உடைக்கப்பட்டுள்ளன. இது எந்த வகையில் நியாயமாகும்? இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியே இந்தப் போராட்டம் இடம்பெறுகிறது. அதுமாத்திரமல்லாமல், ஒட்டுமொத்த மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இது இன்றுடன் நிறைவடையும் போராட்டமும் அல்ல. இன்று விதைக்கப்படும் இந்த விதை ஒரு ஆலமரமாகும். அந்த ஆலமரத்தின் கீழ் அத்தனை சமூகங்களும், சகல மக்களும் நிலையாக நிற்க வேண்டும். குறிப்பாக, இது எந்த வகையிலும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் அல்ல; மாறாக, இது பெருந்தோட்ட மக்களை அராஜகத்துக்குள்ளாக்கும் ஒட்டுமொத்த பெருந்தோட்ட நிர்வாகத்திற்கும் எதிரான போராட்டமாகும்" என்றார்.

43 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago