2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நாய் கடித்ததில் இளைஞன் மரணம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 16 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

நாயொன்றின் நகக்கீறல் காரணமாக ஏற்பட்ட ரேபிஸ் எனப்படும் நீர்வெறுப்பு நோய் ஏற்பட்ட இளைஞனொருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு- செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி கிராமத்தைச் சேர்ந்த டேவிட் இன்பராஜா (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரும் இவருடைய நண்பர்களான மற்றைய இருவரும் களுவன்கேணி நாக தம்பிரான் ஆலயத்தில் பணி செய்துவிட்டு கோயில் வாசலில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அதிகாலை நேரம் நண்பர்கள் இருவரும் நாய்க்கடிக்குள்ளானர்.

பாதிப்புக்கான நபருக்கு நாயின் பற்கள் படவில்லை என்றும் எனினும் நாயின் நகக்கீறல்கள் காணப்பட்டதாகவும் கூறி மூவருமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தன்னுடைய இரண்டு நண்பர்களுக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கு இவரே உதவியாக இருந்துள்ளார். எனினும் தனக்கு நகக்கீறல்கள் மாத்திரம் காணப்பட்டமையால் தனக்கான தடுப்பூசியை ஏற்றுவதற்கு அவர் நினைக்கவில்லை.

இவ்வாறிருக்கும் போது கடந்த 12-10-2016 அன்று பாதிக்கப்பட்ட நபருக்கு திடீரென்று தலைவலி ஏற்பட்டுள்ளது. எனினும் அது குறித்து பொருட்படுத்தாக அவர், அடுத்த நாள் 13ஆம் திகதி குளிப்பதற்கான தயாரான போது, திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவசரமாக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி வெள்ளிக்கிழமை (14) உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனை முடிவில், 'ரேபிஸ்' எனப்படும் நீர் வெறுப்பு நோய் காரணமாகவே குறித்த நபர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

பூனை, நாய், கீரிப்பிள்ளை, நரி, காட்டு எலிகள், குரங்கு, முள்ளம்பன்றி மற்றும் விசர் பிடித்த வளர்ப்புப் பிராணிகள் போன்றவற்றால் மனிதர்களது உடம்பில் சிறிய கீறல்கள் ஏற்பட்டாலும் உடனடியாக வைத்தியசாலைகளுக்கு சென்று அதற்கான தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளுமாறு பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
ரேபிஸ் நோயின் நோயரும்பு காலம் 3 மாதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X