2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

புகழ்பூத்த மிருதங்க வித்துவான் வேல்முருகு சிறிதரன் காலமானார்

Princiya Dixci   / 2016 ஜனவரி 29 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்,ஏ.எம்.ஏ.பரீத்

மட்டக்களப்பின் புகழ்பூத்த மிருதங்க வித்துவான் வேல்முருகு சிறிதரன், மட்டக்களப்பு லேக் வீதியிலுள்ள அவரது வீட்டில் கடந்த புதன்கிழமை (27) மாரடைப்பால் காலமானார். 

இறுதிக்கிரியைகள், இன்று வெள்ளிக்கிழமை (29) அவரது வீட்டில் நடைபெறுகின்றன.

இதேவேளை, இவர் விரிவுரையாளராகப் பணியாற்றிய சுவாமிவிபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்துக்கு இன்று (29) நண்பகல் பூதவுடல், ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, விரிவுரையாளர்களின் மரியாதை அணிவகுப்புடன், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவிருக்கின்றது.

இவர் 21.03.1958 அன்று இலங்கை கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறையில் வீரமுனை திரு. திருமதி. வேல்முருகு தங்கரட்ணம் தம்பதியினருக்கு இரண்டாவது ஆண் வாரிசாகப் பிறந்தார்.

இவர், தனது தந்தை வேல்முருகு ஆரம்ப குருவாகக்கொண்டு மிருதங்கக் கலையைக் கற்றார். தொடர்ந்து அக்கலையை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாணத்தில் வசித்த இந்திய மிருதங்க வித்துவானான ஏ.எஸ்.இராமநாதனிடம் பலவருட காலம் மிருதங்கக் கலையினை கற்றுத்தேர்ந்து, தனது மிருதங்க அரங்கேற்றத்தினை மட்டக்களப்பில் நிகழ்த்தினார்.

பின்னர், சுவாமி விபுலானந்த இசைநடனக் கல்லூரியின் மிருதங்க ஆசிரியராக 1986ஆம் ஆண்டிலிருந்து கடைமையாற்றினார். பின் 2001ஆம் ஆண்டில் இருந்து மிருதங்க போதனாசிரியராகவும், 2005ஆம் ஆண்டில் இருந்து விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்.

இக்காலம், கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தனது முதுதத்துவமானி மேற்படிப்பினை மேற்கொண்டு வந்தார். கடமை புரியத் தொடங்கிய காலத்திலிருந்து நடைபெற்ற சகல விழாக்களிலும், இசை மற்றும் நடன மாணவர்களின் ஆற்றுகைகளிலும் தனது திறமை மிக்க பங்களிப்பை ஆற்றிவந்தார். 

வேல்முருகுசிறிதரன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அங்கிகரிக்கப்பட்ட மிருதங்க கலைஞராகவும் திகழ்ந்தார.; இலங்கை கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல் இலங்கை வந்த நடனக் கலைஞரான திருமதி உமாஆனந்தின் நடன நிகழ்வுக்கும் அணிசேர் கலைஞராக பங்களிப்பு செய்தார்.

இவர், வட இலங்கை சங்கீத சபையினால் வழங்கப்பட்ட கலாவித்தகர் பட்டத்தினையும், இந்து கலாசார இந்து சமய தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சின் அமைச்சரான சி. இராஜதுரைவினால் 'லய இசைச்செல்வன்' என்ற பட்டத்தினையும், கல்லாறு சத்தியசாயி பாபா சபையினால் 'சர்மவாத்தியகலாபதி' எனும் பட்டத்தினையும், 'மிருதங்கசாகரம், மிருதங்கக்கலை மாமணி' போன்ற பல பட்டங்களையும் பெற்ற மிருதங்கக் கலைஞராவார்.

இவர், மட்டக்களப்பில் தான் வாழ்ந்த காலத்தில் நடைபெற்ற இசை விழாக்கள், நிகழ்வுகளில் மட்டுமல்ல சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்திலும் இவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X