2025 மே 09, வெள்ளிக்கிழமை

பாடசாலைக்கு இடப்பட்டிருந்த பூட்டு உடைப்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 05 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் தற்காலிகக் கட்டடத்தில் இயங்கும் ஆரம்பப்பிரிவு பாடசாலையொன்றின் பிரதான கதவுக்கு போடப்பட்டிருந்த பூட்டு பொலிஸாரினால் உடைக்கப்பட்டு, முதலாம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் உள்நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.  

இப்பாடசாலையில் முதலாம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை அனுமதிக்கும் தினமான இன்று செவ்வாய்க்கிழமை அப்பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், புதிய மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலைக்கு வருகை தந்தனர். இதன்போது, அப்பாடசாலையின் தற்காலிகக் கட்டடக் கதவுக்கு அதிபரினால்; போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு, வேறொரு பூட்டு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இப்பாடசாலைக்கு வருகை தந்த அனைவரும் சுமார் ஒன்டரை மணிநேரமாக வெளியில் இருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தமக்கு அதிபர் தெரியப்படுத்தியதைத்; தொடர்ந்து, அங்கு விரைந்து   போடப்பட்டிருந்த பூட்டை உடைத்து முதலாம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் அப்பாடசாலைக்குள் நுழைய அனுமதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் தெரிவித்த குறித்த பாடசாலை அதிபர் எம்.யூனுஸ் 'தமது பாடசாலை தற்காலிகக் கட்டடத்தில் இயங்குகின்றது. இத்தற்காலிகக் கட்டடத்தை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், காத்தான்குடிப் பிரதேச செயலாளர் மற்றும் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடன் பெற்று அதில்; வகுப்பறைகளை ஒழுங்குபடுத்தி புதிய மாணவர்களை அனுமதிக்கவிருந்தோம். இந்தச் சந்தர்ப்பத்தில் இக்கட்டத்தின் பிரதான கதவுக்கு நாங்கள் போட்டிருந்த பூட்டைக் கழற்றிவிட்டு வேறொரு பூட்டு போடப்பட்டிருந்தது. இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டு பொலிஸார் பூட்டை உடைத்துள்ளனர்' என்றார்.

இது தொடர்பில் தெரிவித்த புதிய காத்;தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகசபைச் செயலாளர் ஏ.எம்.பஹ்மி, 'இப்பாடசாலைக்கான கட்டடம் எமது பள்ளிவாசலினால் நிர்வகிக்கப்படுகின்றது. இக்கட்டடம் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால்  பெண்கள் சந்தைக்காக கட்டப்பட்டு எமது பள்ளிவாசலுக்குத் தரப்பட்டது. பெண்கள் சந்தையை வேறிடத்துக்கு மாற்றியதால் இதை நாம் தற்காலிகமாக  குறித்த பாடசாலைக்குக் கொடுத்தோம்.

தற்போது முதலாம் ஆண்டு மாணவர்களை அனுமதித்துள்ள இத்தற்காலிகக் கட்டடத்தில் ஏற்கெனவே பாலர் பாடசாலையொன்று நடைபெற்றுவந்தது. அப்பாலர் பாடசாலை புதிய கட்டடத்துக்கு மாறியதால், எமது அனுமதியின்றி குறித்த பாடசாலை அதிபர் பூட்டுப் போட்டு வைத்திருந்தார். அப்பூட்டை நாம் கழற்றிவிட்டு  புதிய பூட்டை பள்ளிவாசல் நிர்வாகத்தினால் போட்டோம். அதையே  உடைத்துள்ளனர். இக்கட்டடத்தை பள்ளிவாசல் நிர்வாகம் நிர்வகிக்கும் நிலையில் குறித்த பாடசாலையின் அதிபரின் செயற்பாடு வேதனை அளிக்கின்றது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X