Suganthini Ratnam / 2016 ஜூன் 14 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பொத்தானைக் கிராமத்துக்கு இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ் சேவை முதன்முறையாக திங்கட்கிழமை (13) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாழைச்சேனை நகர் மற்றும்; பொத்தானைக் கிராமத்துக்கு இடையிலான இ.போ.ச. சேவை தினமும் இடம்பெறும்.
காலை 06 மணிக்கும் முற்பகல் 10 மணிக்கும் வாழைச்சேனை நகரிலிருந்து புறப்படும் பஸ்கள் காவத்தமுனை, வாகனேரி, முள்ளிவட்டவான் வழியாக பொத்தானைக் கிராமத்தைச் சென்றடையும்.
அவ்வாறே, பொத்தனைக் கிராமத்திலிருந்து காலை 07 மணிக்கும்; பிற்பகல் 2.45 மணிக்கும் புறப்படும் பஸ்கள், அதே வழியாக வாழைச்சேனை நகரைச் சென்றடையும்.
ஒருவழிப் பயணக் கட்டணமாக 60 ரூபாய் அறவிடப்படும் என வாழைச்சேனை சாலை முகாமையாளர் எம்.ஐ.அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
இதுவரை காலமும் பொத்தானைக் கிராம மக்கள் அருகிலுள்ள வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடிப் பிரதேசங்களுக்கு சுமார் 30 கிலோமீற்றர் தூரம் சிரமத்துக்கு மத்தியில் பயணித்தனர்.
இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் செய்னுலாப்தீன் ஹிதாயத்துல்லாஹ், 'கிராம மக்கள் தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடில்லாமல் சமூக இணக்கப்பாட்டுடன் வாழ்வதன் மூலம் தமக்கான அடிப்படை வசதிகளை குறைவின்றிப் பெற்றுக் கொள்ள முடியும்' என்றார்.
'கிராம மக்களின் காலடிக்குச் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் கரிசனைக்கு அமைய நாம் மக்கள் வாழும் தொலை தூரக் கிராமங்களுக்கும் சென்று அவர்களுக்குச் செய்து கொடுக்க வேண்டிய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றோம்.
கிராம மக்கள் மத்தியில் இனப்பாகுபாடு இல்லை. தொழில் ரீதியிலும் இன்னபிற அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொள்வதிலும் அவர்கள் ஒருசமூகத்தில் மற்றொரு சமூகம் தங்கியிருக்கின்றது. சமூக ஒற்றுமைக்கு இந்த தங்கி வாழும் சூழல் ஆரோக்கியமானது. ஆனால், சிலர்; கிராமத்து மக்களின் ஒற்றுமையையும் சீர்குலைக்க நிற்கின்றார்கள். இதற்கு நீங்கள் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது' என்றார்.
'உங்களது மற்றொரு அடிப்படைத் Nவையான குடி தண்ணீரை நாளொன்றுக்கு 7000 லீற்றர் கிராம மக்களின் காலடிக்குக் கொண்டு வந்து வழங்க பிரதேச சபையூடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் வாழும் இடங்களில் 3 நீர்த்தாங்கிகளையும் முஸ்லிம் மக்கள் வாழும் இடங்களில் 3 தாங்கிகளையும் வைத்து நீர் விநியோகிக்க உடனடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. கிராம மக்கள் தாங்கள் காலாகாலமாக உறவுப் பாலம் அமைத்து வாழ்ந்தது போன்று எதிர்வரும் காலங்களிலும் ஐக்கியத்துடன் தமது அடிப்படைத் தேவைகளை முன்வைப்பார்களேயானால் பாடசாலை, வீதி, வீட்டு வசதிகள் என்று எல்லா கட்டுமான அபிவிருத்திகளும் மக்களின் காலடிக்கு வந்து சேரும்' என்றார்.

2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025