2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பழைய சிவில் பாதுகாப்புக் குழுக்கள் மீளமைக்கப்படும்

Niroshini   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சிவில் பாதுகாப்பு குழுக்கள் சமூக பொலிஸ் குழுக்களாக செயற்பட தொடங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் யு.பி.கே.டி.கருணாநாயக்க தெரிவித்தார்.

150வது பொலிஸ் தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது நடமாடும் பொலிஸ் காவலரணை, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி இராஜதுரை கிராமத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“150வது பொலிஸ் தினத்தையொட்டி, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் ஆலோசனையின் பேரில் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தின் கீழும் ஒவ்வொரு நடமாடும் பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நடமாடும் பொலிஸ் காவலரண்கள் ஒரு மாத காலத்துக்கு செயற்படவுள்ளன.

இந்த நடமாடும் பொலிஸ் காவலரண், அக்கிராமத்தில் கல்வி மற்றும் சுகாதாரம் கலாசாரம், விளையாட்டு என்பவற்றுக்கு பங்களிப்பு செய்வதுடன், பொலிஸ் சேவையையும் ஆற்றும்.

சிவில் பாதுகாப்புக்குழுக்கள் சமூக பொலிஸ் குழுக்களாக செயற்பட தொடங்கியுள்ளன. பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பேரில் இந்த சிவில் பாதுகாப்புக்குழுக்கள் சமூக பொலிஸ் குழுக்களாக பெயர் மாற்றப்பட்டுள்ளன.

பழைய சிவில் பாதுகாப்புக் குழுக்கள் சமூக பொலிஸ் குழுக்களாக மீளமைக்கப்பட்டு அது செயற்படும்.

பொலிஸாருக்கு வலுவூட்டும் வகையில் இந்த சமூக பொலிஸ் குழுக்கள் செயற்படவுள்ளன.

பொலிஸ் சேவை சிறப்பாக மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறான நடமாடும் பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

“குற்றமற்ற பிரதேசமாக சமாதானமுள்ள பிரதேசமாக விபத்துக்கள் இல்லாத பிரதேசமாக  ஒரு பிரதேசம் இருப்பதற்கு பொலிஸாரும் பொதுமக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தேவைக்காகவோ அல்லது பொலிஸாரின் தேவைக்காகவோ பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவதில்லை. மாறாக மக்களுக்கு சட்டம் ஒழுங்கு என்பவற்றை ஏற்படுத்துவதற்காகவும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காகவுமே பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

பொலிஸார் ஒரு திசையிலும் பொதுமக்கள் மற்றொரு திசையிலும் பயணித்தால் குற்றமற்ற பிரதேசமாக ஒரு பிரதேசத்தை மாற்ற முடியாது. பொலிஸாரும் பொதுமக்களும் ஒன்றிணைந்து ஒரே திசையில் பயணிக்கும் போதுதான் ஒரு பிரதேசத்தை குற்றமற்ற பிரதேசமாக மாற்ற முடியும்” எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X