2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை மட்டத்தில் மீண்டும் நாட்டுக் கூத்து

Editorial   / 2019 ஜனவரி 31 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், பொன்ஆனந்தம், அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம்

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனின் முயற்சியால், பாடசாலை மட்டத்தில்  மீண்டும் நாட்டுக் கூத்தை நடைமுறைப்படுத்துமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கிழக்குத் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான நாட்டுக்கூத்து, பாடசாலை மட்டங்களில் குறிப்பாக அகில இலங்கை தமிழ்த் தின விழாப் போட்டியில் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்தது.

பாடசாலை மட்டம், கோட்ட மட்டம், வலய மட்டம், மாகாண மட்டம் வரை இதில் கிடைக்கப்பெறும் சான்றிதழ்கள், பாடசாலை மாணவர்களுக்கு, உயர்கல்வியைப் பெறவதற்கு உறுதுணையாக இருந்தன.

ஆனால்,  2015 முதல்  கிழக்கு மாகாண தமிழ்த் தினப் போட்டியிலிருந்து இது நீக்கப்பட்டது.

எனினும், நாட்டாரியல் கலைஞர்கள் கௌரவிக்கப்படும் பொருட்டு, தமிழ்த் தினப் போட்டியில் நாட்டுக்கூத்துப் போட்டி மீண்டும் இடம்பெற வேண்டுமென, மாகாண ஆளுநரிடம், வியாழேந்திரன் எம்.பி முன்வைத்த கோரிக்கையை அடுத்து, இவ்வருடத்தில் இருந்தே  நாட்டுக்கூத்து, தமிழ்த் தினப் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமென, ஆளுநர் பணித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்ப் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக, கிழக்கு  ஆளுநர் செயலகத்தில் வைத்து ஆளுநரும் வியாழேந்திரன் எம்.பியும், நேற்றுக் கலந்துரையாடினர்.

இதன்போது, அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பாடசாலைகளை உடனடியாகத் தரமுயர்த்துவற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு, மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு, ஆளுநர் பணிப்புரை வழங்கியதுடன், பின்தங்கிய பாடசாலைகளுக்குரிய சகல உதவிகளை வழங்குவதாகவும், கிழக்கு ஆளுநர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X