2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘புதிய அரசியல்யாப்பை, சில சக்திகள் குழப்புவதற்கு முயற்சிக்கின்றன’

வடிவேல் சக்திவேல்   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நிரந்தரமானதும் நீடித்து நிற்கக்கூடியதுமான தீர்வைக்காண்பதற்காக, நாடாளுமன்றம் அரசியல் சாசனசபையாக மாற்றப்பட்டு, புதிய அரசியல்யாப்பை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கும் இவ்வேளையில்,  தெற்கிலும் வடக்கிலும் சில சக்திகள், அதைக் குழப்புவதற்கு முயற்சிக்கின்றன” என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இளைஞர் சம்மேளனத்தால் “மதுவற்ற நாடு” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வொன்று, களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று (29) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“தெற்கிலே முன்னாள் பாதுகாப்பமைச்சின் செயலாளர்  கோத்தபாய தலைமையில் வெளிச்சம் என்ற அமைப்பை தொடங்கி பிரசாரங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுக்கின்றார்கள்.

“அத்தோடு, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச  புதிய அரசமைப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் நாடாளுமன்றத்தை குண்டு வைத்து தகர்க்க வேண்டுமென்கின்றார்.

“முன்னாள்  படைத்தளபதி  கமால் குணரட்ன, புதிய அரசமைப்பை ஆதரிப்பவர்கள் துரோகிகள், அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்கின்றார்.

“வடக்கிலும்  தமிழ்மக்களின்  உரிமைக்காகப்  போராடுகின்றோம்  எனக்கூறும் சிலரும்  உருவாக இருக்கின்ற  புதிய அரசமைப்பை எதிர்ப்பதோடு, அதை ஆதரிப்பவர்கள்  தமிழ் மக்களின் துரோகிகள் என்கின்றார்கள்.

“தெற்கில் எதிர்ப்பவர்கள் தமிழீழத்தை பிரித்துக்  கொடுப்பதற்கான அரசமைப்பென்கின்றார்கள். வடக்கில் எதிர்ப்பவர்கள் இந்தஅரசமைப்பில் தமிழருக்கான தீர்வு  எதுவுமில்லையென்கின்றார்கள்.  இதில்என்ன வேடிக்கை என்றால் இடைக்கால  அறிக்கைதான் தற்போது எம்முன்னேஇருக்கின்றது .

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட பலர் இடைக்கால அறிக்கைக்கு பின்னூட்டல்கள்  கொடுத்திருக்கின்றார்கள். மாதக்கடைசியில்தான் நாடாளுமன்றத்தில்கூட  விவாதம் நடக்கவிருக்கின்றது.

“பூரணப்படுத்தப்பட்ட ஓர் அரசமைப்பு  வருவதற்குள் நீங்கள் இதை எதிர்க்கின்றீர்கள் என்றால், உங்களுக்கு இந்த நாடு  அமைதியாக இருக்கக்கூடாது,  தமிழ் மக்கள்  நிம்மதியாக  இருக்கக்கூடாது என்றா  நீங்கள் நினைக்கின்றீர்கள்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .