2025 மே 02, வெள்ளிக்கிழமை

’புத்தாண்டு வியாபாரத்தில் குறியாக இருந்தால் கொரோனாவை தடுக்க முடியாது’

Princiya Dixci   / 2021 மார்ச் 22 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலத்தில், வியாபாரம் களைகட்டும் என்பதில் மட்டும் வர்த்தகர்கள் குறியாக இருந்தால், கொரோனா வைரஸ் பரவலடைவதை எவராலும் தடுக்க முடியாமல் போய்விடுமென, சுகாதார வைத்திய அதிகாரி ஷாபிறா வஸீம் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர வர்த்தகர்களுக்கு, கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்பூட்டல், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனையில் இன்று (22) நடைபெற்றது.

இதில் ஏறாவூர் நகர வர்த்தகர்கள், சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சுகாதார வைத்திய அதிகாரி ஷாபிறா, “வர்த்தகத்தின் அடிப்படையிலான இலாப நோக்கத்தை மாத்திரம் மனதில் வைத்துக் கொண்டு, சுகாதார வழிமுறைகளை மறந்து வர்த்தகர்கள் செயற்படுவார்களாயின், அது ஒட்டு மொத்த பிரதேச மக்களுக்கும் கேடாக அமையும்.

“உடல் ஆரோக்கியத்தை இழந்து, வருமானத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு நாம் நிம்மதியாக வாழ முடியுமா என்பதை வர்த்தகர்கள் சிந்திக்க வேண்டும். அலட்சியத் தன்மை இருக்குமாயின், பின்னர் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அவஸ்தைப்பட நேரிடும். இதனை வர்த்தகர் சமூகம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

“எமது நகரம் பாதுகாப்பாக இருக்கிறது  என்பதை நாமே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வர்த்தகர்கள் தங்களையும் தங்களது கடைகளில் பணிபுரிவோரையும் தங்களது வர்த்தக நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களையும் அவர்களது குடும்பத்தையும் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டிருக்கின்றார்கள்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .