2025 மே 15, வியாழக்கிழமை

போலியோ இல்லாத ‘நிலைமையை இலங்கையில் தக்கவைக்க வேண்டும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலியோ இல்லாத இலங்கை எனும் சிறப்பைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென, கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உப வேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் தெரிவித்தார்.

சர்வதேச போலியோ ஒழிப்புத் தினம் நாளை (24) அனுஷ்டிக்கப்படும் நிலையில், அது தொடர்பான விழிப்புணர்வுக்காக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருட போலியோ தடுப்பு சர்வதேச தினத்தை அனுஷ்டிக்கும் வகையில், “போலியோவை உலகின் முகத்திலிருந்து இல்லாதொழிக்க ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில், மட்டக்களப்பு ரோட்டரிக் கழகம், ரோட்டரி நிலையத்தில், நாளை மறுநாள் (25) மாலை 6.30க்கு, விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக மேலும் குறிப்பிட்டுள்ள வைத்தியர் கருணாகரன், போலியோ எனும் இளம் பிள்ளைவாத நோயை உருவாக்குகின்ற நுண்ணுயிர் வைரஸ் கிருமியை, உலகிலிருந்து இல்லாதொழிக்க 1988ஆம் ஆண்டிலிருந்து எடுக்கும் முயற்சிகளும், வெற்றிகளும், சவால்களும், ஆற்றப்பட வேண்டிய செயற்பாடுகளும் இந்நாளில் நினைவு கூரப்படுகின்றன என நினைவுபடுத்தியதோடு, தென்னாசிய நாடுகளில் இலங்கையே, போலியோ அற்ற நாடாக 2010ஆம் ஆண்டில் முதன்முதலாக பிரகடனப்படுத்தப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையை அடையும்வரை, இலங்கையிலும் வருடா வருடம், 5 வயதுக்குட்பட்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் குறிப்பிட்டதொரு நாளில், போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது என்பதையும் அவர் ஞாபகப்படுத்தினார்.

இந்நிலையில், “உலகிலுள்ள சிறுவர்களைப் பாதுகாக்க மேலும் செயற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளன. போலியோ அற்ற சமூகத்தைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளும் நோக்குடன், தற்பொழுதும் போலியோ தடுப்பு நடவடிக்கைகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன" என அவர் தெரிவித்துள்ளார்.

போலியோ வைரஸ், தொற்றடைந்த உணவு, தண்ணீர் வழியாக ஒருவருக்குத் தொற்றுகின்றது. இவ்வைரஸானது, சிறுபிள்ளைகளின் முன்நாண் நரம்பு மண்டலத்தை தாக்குகின்றது. இதனால் மார்புக்கூட்டுக்கும் அவயவங்களுக்குமான நரம்புகள் செயலிழக்க, அவை இயக்குகின்ற மார்பு மற்றும் கை, கால் தசைகள் செயலிழக்கின்றன. சுவாசக் கஷ்டம், இறப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .