2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

‘மக்கள் பிரச்சினைகளை நெகிழ்வுடன் அணுகவும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 மே 02 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூர் நகர சபைப் பிரிவில் கட்டட நிர்மாணங்களின்போது, பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை, நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு, நெகிழ்வுத் தன்மையோடு அணுகுமாறு, அதிகாரிகளையும் கட்டட நிர்மாணங்களை மேற்கொள்வோரையும் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதென, ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் ஐ. அப்துல் வாஸித் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபையின் விசேட சபை அமர்வு, நேற்று (01) இடம்பெற்ற போது, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அனைவரின் பிரசன்னத்துடன், இந்த விசேட சபை அமர்வு இடம்பெற்றது.

ஏறாவூர் நகரை ஊடறுத்துச் செல்லும் கொழும்பு - மட்டக்களப்பு நெடுஞ்சாலை விஸ்தரிப்பு, நகர அபிவிருத்தியும் அழகுபடுத்தலும், நகர சபைப் பிரிவில் தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய அவதானம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள், இந்த விசேட சபை அமர்வில் கலந்தாலோசிக்கப்பட்டுத் தீர்மானங்கள் எட்டப்பட்டன என, தவிசாளர் அப்துல் வாஸித் மேலும் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபைக்குட்பட்ட வாவிக்கரையின் ஒரு புறத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்றுதல், இருளடைந்த வீதிகளுக்கு தெரு மின்விளக்குகளைப் பொருத்துதல், குறுக்கு வீதிகளின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தல், தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துதல் உள்ளிட்ட இன்னும் பல விடயங்கள் ஆராயப்பட்டு, தீர்மானங்கள் எட்டப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .