2025 மே 23, வெள்ளிக்கிழமை

மட்டு. மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு 37 முறைப்பாடுகள்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் சென்றோர் பற்றி மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு 37 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்புப் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று திங்கட்கிழமை அவர் மேலும் விவரித்துக் கூறியதாவது,

“மனித உரிமைகள் விடயத்தில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் மட்டக்களப்புப் பிராந்திய அலுவலகம் அதீத அக்கறை எடுத்துச் செயற்பட்டு வருவதால், மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள முறைப்பாடுகளும் எமது அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன.

“அந்த வகையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் கவனிக்கப்படாதுபோன மத்திய கிழக்கு நாட்டுக்குச் சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்கள் 37 பேர் பற்றிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

“கடந்த 2015ஆம் ஆண்டில் ஆகக் கூடியதாக 20 முறைப்பாடுகளும், கடந்த ஆண்டு 12 முறைப்பாடுகளும் நடப்பாண்டின் இதுவரை ஓகஸ்ட் வரையுள்ள காலப்பகுதியில் 05 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்று, அவற்றுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சிலவற்றுக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

“துன்புறுத்தல், தொடர்பற்ற நிலைமை, சம்பளம் வழங்கப்படாமை, ஒப்பந்தக் காலம் முடிவடைந்தும் மீண்டும் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படாமை, ஒப்பந்த சம்பளம் மற்றும் ஒப்பந்தத்திலுள்ளவாறான வசதி வாய்ப்புகள் செய்து கொடுக்கப்படாமை  குறித்தே, இந்த 37 முறைப்பாடுகளும் கிடைக்பெற்றுள்ளன.

“இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் நடவடிக்கை எடுக்கப்படுவதில் தாமதம், கவனிப்பாரற்ற நிலைமை, புறக்கணிப்பு அல்லது திருப்தியீனம் என்பது போன்ற காரணங்களினாலேயே ஏற்கெனவே வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறையிட்டவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடி வருகின்றார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X