2025 மே 15, வியாழக்கிழமை

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிழக்கில் ஆதரவு

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ. ஹுஸைன் , எம்.எஸ்.எம்.நூர்தீன், க.விஜயரெத்தினம், கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பள உயர்வு கோரி, மலையகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், அத்தொழிலாளர்களுக்கு, தமது ஆதரவைத் தெரிவித்து, கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பில் முதன்முறையாக ஆதரவு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

“தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வில் நாமும் ஒளியேற்ற உதவுவோம்” என்ற தொனிப்பொருளில், மட்டக்களப்பு, காந்தி பூங்காவுக்கு முன்பாக, இன்று (21) இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு வாழ் இளைஞர்களினதும் சமூக ஆர்வலர்களினதும் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

“தோட்டத் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கொடு”, “எங்களை வாழவிடு - மலையக மக்களை வாழவை”, “அரசாங்கமே தாமதிக்காது, மலையத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்து”, “தோட்டத் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே” போன்ற கோஷ‪ங்களை எழுப்பியும் பதாதைகளை ஏந்தியவாறும், இவ்வார்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மழையிலும் வெயிலிலும் பாடுபட்டு, இந்நாட்டின் பொருளாதாரத்துக்கு வலுச்சேர்க்கும் மலைய மக்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற, நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டுமென, ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் கோரிக்கை விடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .