2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மௌனிகளாக தமிழ் தலைமைகள்; முன்னாள் எம்.பி காட்டம்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 01 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகம் 33 வருடங்களாக தனியான பிரதேச செயலகமாக  தொழிற்பட்டு வரும் நிலையில், இச்செயலகத்தை இல்லாதொழிப்பதற்கான முஸ்தீபுகள், முஸ்லிம் அடிப்படை வாதிகளாலும், அரசியல்வாதிகளாலும் முன்னெடுக்கப்படுவது வெளிப்படையான விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இந்த நகர்வின் ஓர் அங்கமே அரச இணையத் தளத்திலிருந்து கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் நேற்று (31) ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது வங்குரோத்து அரசியலை தமது சமூகத்துக்குள் தக்கவைத்துக்கொள்வதற்காக கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தை அடிக்கடி கையிலெடுத்துக்கொண்டு, இரு இனங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

“இணைந்த வடகிழக்கு, அதில் தமிழ்பேசும் மக்களுக்கான மாகாண அலகு, சிங்கள பேரினவாதத்துடன் இணையாது மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களை உள்ளடக்கிய மாகாண சுயாட்சி என பகல் கனவு காணும் தமிழ்த் தலைமைகள், இவ்விடயத்தில் உறங்கு நிலையில் உள்ளார்கள்.

 “கல்முனை வடக்கு பிரதேச செயலக செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் யார்? முஸ்லிம் தீவிரவாத போக்குடைய அடிப்படை வாதிகள்தான். அப்பாவி முஸ்லிம்கள் அல்ல. 

“கல்முனை வாழ் பூர்வீக தழிழர்கள் இன்று தமது வாழ்விடங்களை நாளுக்கு நாள் இழந்து வருகின்றனர். கடந்த நல்லாட்சி காலத்தில் கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் நழுவவிட்ட தமிழ் தலைமைகள் இனி ஒன்றையும் சாதிக்கப்போவதில்லை.

“இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றால், முஸ்லிம்கள் மத்தியில் உள்ள மதவாத அடிப்படைவாத போக்கற்ற சிவில் சமூகங்கள் முன்வர வேண்டும். தமிழ், முஸ்லிம் சிவில் சமூகங்கள், அரசியல்வாதிகளை புறந்தள்ளிவிட்டு, ஒரே மேடையில் பேச முன்வரவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X