2025 மே 23, வெள்ளிக்கிழமை

‘யுத்தம் இல்லை என்றால் ஏற்கமாட்டேன்’

Editorial   / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடிவேல் சக்திவேல், வா.கிருஸ்ணா, எஸ்.சபேசன்

“யுத்தம் இல்லை என்று, அரசாங்க அமைச்சர்கள் கூறினால், அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.  

தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரசகரும மொழிகள் அமைச்சினால், மட்டக்களப்பு மாவட்டம் ஒந்தாச்சிமடத்தில், நேற்று (03) இடம்​பெற்ற நடமாடும் சேவையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

“யுத்தம்தான் இல்லை; ஆனால், மக்களிடம் பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதுவே உண்மை. இந்தப் பிரச்சினைகளுக்கு, நாம் படிப்படியாகத் தீர்வுகண்டுக் கொண்டிருக்கின்றோம். 

“மட்டக்களப்பிலிருந்து, காணாமலாக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு, எமது அமைச்சினால், புத்தகப்பைகளை வழங்குகின்றோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிள்ளைகளையும், நாம் கவனத்திலெடுத்துதான் இதனை மேற்கொண்டுள்ளோம். இந்நிலையில், ‘அரச சேவை, மக்களுக்காக’ எனும் தலைப்பின் கீழ்தான், நாம் நடமாடும் சேவைகளை நடாத்திவருகின்றோம். மக்கள், அரச திணைக்களங்களை நாடிச் சென்று, அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாதவிடத்து, அரச சேவைகளை, மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில்தான், இந்த நடமாடும் சேவை இடம்பெறுகின்றது.  

“மட்டக்களப்பு மாவட்டம், கடந்த காலங்களில் சொல்லொணாத் துன்பங்களைச் சந்தித்த மாவட்டம். தற்போது, யுத்தம் முடிந்துவிட்டது என, எல்லோரும் சொல்கின்றார்கள். யுத்தம் முடிந்துவிட்டாலும் கூட, யுத்தம் நடைபெற்றதற்கான காரணங்களும் அடிப்படை மூலகாரணங்களும், இன்னும் கண்டறியப்படவில்லை.  

“காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கும் காணாமல் போனவர்களுக்கும், பதிலைத் தேடித்தர வேண்டிய கடப்பாடு, எமக்கு இருக்கின்றது. கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியிலே, காணாமல்போன கொடுமைகள் நடந்தது. அந்த ஆட்சியின் பாவங்களைத்தான், நாங்கள் தற்போது கழுவிக்கொண்டிருக்கின்றோம். இப்போதைய ஆட்சியில், யாரும் கடத்தப்படுவதில்லை. யாரும் சட்டவிரோதமாகக் கொலை செய்யப்படுவதுமில்லை. இந்த வெற்றி, நாம் அனைவரும் வாக்களித்து, இந்த அரசாங்கத்தைக் கொண்டு வந்ததால் கிடைத்தது என்பதை, மறந்து விடக்கூடாது. 

“நான்கு மதங்களும் தமிழர், சிங்களவர், இஸ்லாமியர், மாத்திரமின்றி, 19 இனக்குழுக்கள் கொண்ட நாடுதான் இலங்கை. நாம் அனைவரும், ஒரு நாட்டின் பிள்ளைகள் என்றால், அனைவரும் சமத்துவமாக இருக்கவேண்டும். ஆனால், மட்டக்களப்பு மாவட்டதை எடுத்துக் கொண்டால், தேசிய பாடசாலைகள் குறைவாக உள்ளன. அபிவிருத்திகள் போதாது. வைத்தியசாலைகளில் போதிய குறைபாடுகள் உள்ளன. இவைகளனைத்தையும், நாம் தரமுயர்த்த வேண்டும். அதற்குரிய வேலைகளை, நாம் செய்து கொண்டிருக்கின்றேன். 

“கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருந்தாலும், மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பிரதிநிதியாகத்தான், அமைச்சரவையில் இருக்கின்றேன் என்பதை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உணர்ந்து கொள்ளுங்கள்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X