2025 மே 15, வியாழக்கிழமை

‘விகராதிபதியை வெளியேற்றவும்’

வா.கிருஸ்ணா   / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத் தளபதி போன்று செயல்படும் மட்டக்களப்பு, மங்களராமை விகரையின் விகராதிபதி அம்பிட்டிய சுமணரெட்ண தேரர்  கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படுவதுடன், அவர் மட்டக்களப்பிலிருந்து வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்புத் தொகுதியின் இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

“மயிலம்பாவெளியில் புத்த துறவியின் காட்டு மிராண்டித்தன செயல்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.இந்தத் துறவி, பௌத்த மதத்துக்கு அவமானச்சின்னம். காவி உடை தரித்த இராணுவக் கட்டளை அதிகாரி போன்றே இவரின் நடத்தை உள்ளது.

“சுமணரெட்ண தேரர், மட்டக்களப்பில் இன்று நேற்றல்ல. தொடர்ச்சியாக அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்துவதும் தெருச்சண்டியன் போன்று செயல்படுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

“2015ம் ஆண்டு பட்டிப்பளை பிரதேச்செயலகத்தில் அத்துமீறி பிரவேசித்து அடாவடித்தனத்தை மேற்கொண்டதுடன், கெவிளியாமடுவில் கிராமசேவை உத்தியோகத்தரை மிகவும் கீழ்தரமாகவும் ஒட்டுமொத்த தமிழ் மக்களைப் புண்படுத்தும் விதத்தில்  தகாத வார்தைகளால் ஏசினார்.

“இவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து இடமாற்ற வேண்டுமென, அப்போது நாம் தெரிவித்தோம். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

“எல்லை கிராமங்களில் அத்துமீறி காணி அபகரிப்பு செய்வதும் அதைத் தடுக்க சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள், அலுவலர்கள் சென்றால், பொலிஸார் முன்னிலையில் அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, அதிகாரிகளைத் தாக்க முய்சிப்பதும் ஒரு மத குருவாக அன்றி, இராணுவத் தளபதியாக இவர் செயல்படுவதைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

“நேற்று பட்டிப்பளை பிரதேச செயலாளர். இன்று செங்கலடி பிரதேச செயலாளர். நாளை எந்தப் பிரதேச்செயலாளருக்கும் இந்த சுமண ரெட்ண தேரரலால் எதுவும் நடக்காது என்ற உத்தரவாதம் இல்லை.

“எனவே, உடனடியாக மயிலம்பாவெளியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாகவும் கடந்த காலம் இவரின் செயல்பாடுகள் தொடர்பாகவும் சரியான நீதி வழங்கப்படவேண்டும்.

“இந்த விடயத்தை நீதிமன்றில் விசாரணை செய்து தண்டிக்கப்படுவதுடன், ஜனாதிபதி தலையிட்டு, சம்பந்தப்பட்ட பௌத்த மத பீடாதிபதிகளின் கவனத்துக்கும் இந்த புத்த துறவியின் செயல்பாட்டை எடுத்துக் கூறி உடனடியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து இவரை இடமாற்றம் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .