2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’விசேட தேவையுடையோருக்கான உரிமையை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை’

Suganthini Ratnam   / 2017 ஜூலை 05 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

விசேட தேவையுடையோருக்கான பாதுகாப்பு அடிப்படை உரிமையை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தேவையுடையோரின் உரிமைகள் தொடர்பான செயலமர்வு, மட்டக்களப்பு ஹமிட் கேட்போர் கூடத்தில் இன்று  நடைபெற்றபோதே, அவர் இதனைக்  கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,'சர்வதேச சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் தனது  மக்களுக்குச் சேவை செய்வதற்குமான வழிகளிலொன்று, சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தைப் பின்பற்றி அதன் மூலம் உரிமைகளை மக்களுக்கு உறுதிப்படுத்துவதாகும்.

'இது சகல மக்களுக்கும் குறிப்பாக, விசேட தேவையுடையோருக்கும் எவ்வகையிலும் பாதிக்க முடியாத உள்ளார்ந்த உரிமைகள் உள்ளன என்பதைத் தெரிவிப்பதை அடிப்படையாகக் கொண்டதாகும். விசேட தேவையுடையோருக்குப் பாதுகாப்பு அடிப்படை உரிமை உள்ளது என்பதால், மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்' என்றார்.  

'ஒரு நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், பிரஜைகளின் பொதுநலனை விருத்தி செய்தல், சமூக நீதியை நிலை நாட்டுதல் என்பவற்றுக்கு  மனித உரிமைகள்  அத்தியவசியமானது.  மனித உரிமைகள் சம்பந்தமான எண்ணக்கரு, எமது நாகரிகத்தின் உன்னதமான சாதனை எனலாம்.

'ஒவ்வொரு மனிதனும் மனித உரிமையையும் சட்டத்தையும் கற்றறிவதுடன், இதன் மதிப்பை மேம்படுத்திப் பாதுகாக்க வேண்டும். நாட்டின் அதியுயர் சட்டமாகிய அரசியலமைப்பினுள் அல்லது விசேட சட்டங்களைக் கொண்டுவந்து அவற்றினுள் மனித உரிமைகள் சாசனத்திலுள்ள விடயங்களை உள்ளடக்கி சட்டமாக்குவதன் மூலமே உரிமைகளை நாம் சட்ட ரீதியாக பெற்றுக்கொள்ள முடியும்.

'எமது நாட்டில் 1972ஆம்; ஆண்டில் கொண்டுவரப்பட்ட  அரசியலமைப்பிலும் அதன் பின்னர், 1978ஆம் ஆண்டில்  கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பிலும் அடிப்படை உரிமைகள் என்ற வகையில் உரிமைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எனவே, எல்லா மனித உரிமைகளும் அடிப்படை உரிமைகளல்ல. ஆனால், அடிப்படை உரிமைகள் எல்லாம் மனித உரிமைகளாகும்.

'அரசியலமைப்பின் மூன்றாவது அத்தியாயத்தில், அடிப்படை உரிமைகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தத்திலும் இன்னும் பல அடிப்படை உரிமைகள் உள்ளீர்க்கப்படவிருக்கின்றன.

'அடிப்படை உரிமைகள் அனைத்தும் எம்மால் நினைத்தவாறு அனுபவிக்கக்கூடிய உரிமைகளல்ல. இந்த உரிமைகள் சில வரையறைக்கு உட்பட்டவையாகும்.  இதன் வரையறைகள் பற்றியே உறுப்புரை பதினைந்து கூறுகின்றது.  

'இந்த அடிப்படை உரிமைகளில் ஏதாவதொன்று, நிறைவேற்று அல்லது நிர்வாக நடவடிக்கை காரணமாக மீறப்படின், அல்லது உடனடியாக மீறப்படவுள்ளமை தொடர்பில் அரசியலமைப்பில் 126ஆவது உறுப்புரையில் குறி;ப்பிடப்பட்டது போன்று, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும்.

'அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசியலமைப்பினால் அரச அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளது' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X