2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

“காணிகள் முரண்பாடின்றி வழங்கப்படும்”

Kogilavani   / 2017 மார்ச் 26 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, மாத்தளை மாவட்டங்களுக்கு உட்பட்ட அரச பெருந்தோட்டக் காணிகளில் வாழும் மக்களுக்கு, அந்தந்தக் காணிகள் பிரித்துக்கொடுக்கப்படுமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.     

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,  

“கடந்த வாரம், கூட்டணிக்கும்,  அரச பெருந்தோட்டத் துறைசார்ந்த அமைச்சர் கபீர் ஹாஷிமுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களை அடுத்து,  கண்டி, மாத்தளை மாவட்டங்களை பெரும்பாலும் உள்ளடக்கிய அரசுக்கு சொந்தமான மூன்று பெருந்தோட்ட நிறுவனங்களின் காணிகள் வெளியாருக்கும், அரசின் ஏனைய அபிவிருத்தி நோக்கங்களுக்கும் பிரித்து வழங்கப்படுவது, இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் வெள்ளிக்கிழழை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுகளின் போது, இந்த தோட்டங்களில் வாழும் மலையக தமிழ் குடும்பங்களுக்கு, வாழ்வாதார நோக்கில் காணிகள் பிரித்து கொடுக்கப்படும் பிரதமர் தெரிவித்தார்.

இதேவேளை, தோட்டங்களை அண்மித்து வாழும் கிராமத்தவர்களுக்கும் அதேபோன்று காணிகள் தேவைப்படுவதாக, குறிப்பிட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் எம்பீக்கள் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் பிரதமர் என்னிடம் தெரிவித்தார்.

இத்தோட்டங்களில் வாழும், இந்நாள், முன்னாள் மலையக தமிழ் தொழிலாளர் குடும்பங்களின் எண்ணிக்கைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய காணிகளின் பரப்பளவு தொடர்பான விபரங்களை கண்டறிந்து, வாழ்வாதார காணிகள் அதே தோட்டங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும். இவை வீட்டுத் திட்டங்களுக்காக வழங்கப்படுகின்ற ஏழு பேர்ச் காணியுடன் தொடர்பில்லாத, வாழ்வாதாரக் காணிகளாக கருதப்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை, பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் கண்டி, மாத்தளை மாவட்ட தோட்ட மற்றும் கிராமத்து மக்களுக்கு காணிகள் வழங்கப்படும் செயற்பாடுகள், எந்தவித முரண்பாடுகளும் இல்லாத விதத்தில் கவனமாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், இது தொடர்பில் கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க, கூட்டணியின் கண்டி மாவட்ட எம்பி வேலுகுமாரை நாம் நியமித்துள்ளோம் எனவும் பிரதமருக்கு நான் தெரிவித்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X