2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

'தமிழர்கள் சுற்றுலா வந்தவர்கள் இல்லை"

Kogilavani   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா                         

இந்நாட்டுத் தமிழ் மக்கள் நாட்டைவிட்டே செல்ல வேண்டுமென்று, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கூறியிருப்பது வருத்தமளிப்பதாக ஊவா மாகாண அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, ஞானசார தேரர், தமிழ் மக்களை நாட்டைவிட்டு செல்ல வேண்டுமென்று கூறிய கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறியதாவது,

ஞானசார தேரர் பௌத்த மதத்தில் மதிக்கக்கூடியதொரு துறவியாவார். தமிழ் மக்கள் கடவுளுக்கு அடுத்த படியாக மதிப்பதும், மத குருமார்களையேயாகும். அம்மத குருமார் வரிசையில் ஞானசார தேரர் கூறிய கருத்துகள் தமிழ் மக்கள் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளன.
இரு சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுவது சகஜம். அந்நிலையில், அம்முரண்பாடுகளைப் பேச்சு வார்த்தைகளின் மூலமே தீர்த்துக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொண்டும் வசைப்பாடிக் கொண்டும், தாக்கிக்கொண்டும் இருப்பதில், எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை.

தமிழ் மக்கள், அண்மையில் இலங்கைக்குச் சுற்றுலா வந்தவர்கள் அல்ல. பல நூறு வருடங்களுக்கு முன்பே அவர்கள் இந்நாட்டிற்கு வந்துள்ளனர். இந்நாட்டின் அரசியலிலும் அவர்கள் உயரிய நிலையிலுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்திலும் அம்மக்கள் முதுகெழும்பாகவே இருக்கின்றனர். இந்நாட்டின் அனைத்து துறைகளிலும், அம்மக்களின் பங்கு மகத்தானதாக இருக்கின்றது.

இந்நாட்டின் சிங்கள மக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அத்தனை உரிமைகளும் தமிழ் மக்களுக்கும் இருக்கின்றன. ஆகையினால், இந்நாட்டு தமிழ் மக்களை வேறுப்படுத்தி பேசுவது கவலைக்குரிய விடயமாகும்.

அரசியல்வாதியொருவர் இவ்வாறு பேசியிருப்பாரேயானால் அது தமிழ் மக்களை வெகுவாகப் பாதித்திருக்காது. ஆனால், பௌத்த துறவியொருவர் தமிழர்களை இந்நாட்டைவிட்டு வெளியேற்றுவேன் என்று கூறுவது வேதனை தருகின்றது. புத்த பெருமானும் இந்தியாவிலிருந்து தான் இலங்கை வந்துள்ளார். அவர் வழி வந்த பௌத்த மதமும், அனைத்து மதங்களையும் சமமாக மதித்து வருகின்றது. புத்த பெருமானையும், பௌத்த மதத்தையும் தமிழ் மக்கள் போற்றி, மதித்து வருகின்றவர்களென்பதையும், இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் பெரும்பான்மை மக்கள் மத்தியில் தாம் இனவாதிகள் அல்ல. நாம் நடுநிலைமையை வகிக்கின்றோம் என்று காட்டிக்கொள்ளும் பொருட்டு 'வாருங்கள் எல்லோரும் இந்தியாவுக்கு ஓடி விடுவோம் என்று கூறி வருகின்றனர். ஆனால், இலங்கை தொழிலாளர் காங்கிரஸைப் பொறுத்தவரையில் தேரர் கூறிய கருத்துக்களுக்கு நடுநிலைமை வகிப்பது என்பதே அவசியமில்லை. அவர் கூறினார் என்பதற்காக இந்நாட்டை விட்டுப் பயந்து ஓடுவதற்கு எமது மக்கள் தயாரில்லை. எதனையும் எதிர்த்து நின்று போராடி வெற்றி பெறுவதே எமது இலக்கு. இது எமது தாய் நாடு. இந்நாட்டை வளம் கொழிக்க வைத்த எமக்கு இந்தியாவுக்கு ஓடி விட வேண்டிய அவசியமில்லை' என்று குறிப்பிட்டார.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .