2025 ஜூலை 02, புதன்கிழமை

700 விசேட வைத்தியர்கள் ஓய்வு

Kogilavani   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-உமா மகேஷ்வரி

'நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் 4,000 வைத்தியர்களுக்கும் 4,000 தாதியர்களுக்குமான பற்றாக்குறை நிலவிவருவதுடன்; 1,373 விசேட வைத்திய நிபுணர்களுக்குமான வெற்றிடங்களும் ஏற்பட்டுள்ளன. இவ்வாறானதொரு நிலையில் அடுத்த வருடம் 700 விசேட வைத்தியர்கள் ஓய்வு பெறவுள்ளனர்' என  போசனை மற்றும் சுகாதார, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண கூறினார்.

இதேவேளை, 'இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அவசர அம்பியுலன்ஸ் சேவையும் வான் வைத்திய சேவையும் ஆரம்பிக்கப்படும். ஹெலிகொப்டரின் மூலம் கொழும்பிலிருந்து தூர பகுதிகளுக்கு வைத்தியர்கள் அழைத்துச் செல்லப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படும்' என்றும் அவர் கூறினார்.

'கடந்த அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக செயற்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய ஆட்சியில் சுகாதாதுறைக்கும் கல்வி துறைக்கும் முன்னுரிமை வழங்கியுள்ளார்' எனவும் அவர் கூறினார்.

இரத்தினபுரி வைத்தியசாலையில் 798 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை, சனிக்கிழமை(24) திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' எனும் செயற்றிட்டத்துக்கு அமைவாக எதிர்வரும் ஐந்து வருடங்களில் நாட்டிலுள்ள பிரதான வைத்தியசாலைகளில் 24 மணிநேர வெளிநோயாளர் பிரிவு சேவைகள் ஆரம்பிக்கப்படும்.  

இலங்கையில் விபத்துக்கள் மற்றும் இதர நோய்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு மாவட்டங்கள் தோறும் உள்ள வைத்தியசாலைகளில் விபத்து, அவசர சிகிச்சை பிரிவுகள் ஆரம்பிக்கப்படும்.  

சிறுநீரக நோய் பொலன்னறுவையில் மட்டுமே அதிகரித்துள்ளதாக கூறப்பட்டது. தற்போது நாட்டில் பல பகுதிகளிலும் சிறுநீரக நோய் மிக வேகமாக ஏற்பட்டு வருகின்றது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.

நாட்டில் விபத்துக்களும் தொற்றா நோய்களும் அதிகரித்து காணப்படுகின்றன. 65 சதவீதமானவர்கள் இதனால் உயிரிழக்கின்றனர். இதனைக் கருத்திற்கொண்டு மாவட்ட ரீதியாக  விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன்மூலம் விபத்து மற்றும் தொற்றா நோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்' என்றார்.

'இலங்கையில் சுகாதார சேவை 99 வீதம் சிறந்ததாகவுள்ளது. அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் இது சமனானது. நாட்டில் மலேரியா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 3 வருடங்களில் மலேரியா முற்றுமுழுதாக கட்டுப்படுத்தப்படும். இதற்கான சான்றிதழ்களை உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு வழங்கும்.

2010 ஆம் ஆண்டு 307 பேர் டெங்கினால் உயிரிழந்துள்ளனர். இது தற்போது 34 ஆக குறைக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இரத்த பரிசோதனை நிலையம், இரத்த வங்கி பிரிவுகள் ஆரம்பிக்கப்படும்' என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .