Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 11 , பி.ப. 09:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக தொழிலாளிக்கு, யாரும் புதிதாக ஆயிரம் ரூபாய் தரத் தேவையில்லை என்றும் துண்டுவிழும் 240 ரூபாயைத் தான் தரவேண்டும் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அப்பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இப்போது தொழிலாளிக்கு கிடைப்பது 760 ரூபாய் என்றும் 1,000 ரூபாயில் துண்டு விழும் தொகையான 240 ரூபாயில் முதலில் 140 ரூபாயையும் பின்னர் 100 ரூபாயையும் அடுத்ததாக 50 ரூபாயையும் தரவுதற்கு தாங்கள் முயன்றதாகவும் எனினும் அது முடியாமல் போய்விட்டது என்றும் கூறியுள்ளார்.
கடந்த நான்கரை வருடங்களில், எத்தனையோ விடயங்களில் மலையகத்தை, தேசிய அரங்கில் தூக்கி நிறுத்தியதாகக் கூறியுள்ள அவர், இந்தச் சம்பள சிக்கல்தான் முடியாமல் போனது என்றும் அதை ஒப்புக்கொள்வதாகவும் அதற்காக வருந்துவதாகவும் ஆனால், அன்றைய தவறு இன்றைய தவறுக்கு சமனாகிவிடாது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
“அன்று, எங்கள் அரசில் பெருந்தோட்ட துறை அமைச்சராக இருந்தவர், நவீன் திஸாநாயக்க. இவருடன் நாம் பலமுறை கட்சி தலைவர்கள் கூட்டங்களில், அமைச்சரவையில் சண்டையிட்டோம். இது இரகசியமல்ல. அனைவரும் அறிந்த பகிரங்க உண்மை” என்றும் கூறியுள்ளார்.
அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“ஆரம்பத்தில் லக்ஸ்மன் கிரியெல்ல இந்தப் பெருந்தோட்ட துறை அமைச்சு பதவியில் இருக்கும் போதுதான், எங்கள் கோரிக்கையை ஏற்று, ஏழு பேச் வீட்டுக்காணி திட்டத்தை அமைச்சரவையில் கொண்டு வந்தார்.
“ஆனால், திடீரென லக்ஸ்மன் கிரியல்லவை மாற்றி விட்டு, நவீ ன் திசாநாயக்கவை, பெருந்தோட்ட துறை அமைச்சராக, ரணில் நியமித்தார். அதன் பின் பிரச்சினைகள் ஏற்பட்டன. அப்போது முதல், தோட்டக் காணிகளை, வீட்டு திட்டங்களுக்கு தர முடியாது என்று எம்முடன் எப்போதும் முரண்பட்டபடியே வந்த நவீன், உழைக்கும் தொழிலாளியின் நலனை விட, எப்போதுமே தோட்ட கம்பனிகளின் நலனையே மேலே தூக்கி வைத்து வந்தார்.
“கடைசியில் அமைச்சரவையில் பெரும் சண்டையிட்டு, நிதியமைச்சர் மங்கள சமரவீரவை பிடித்து, முதற்கட்டமாக ரூ. 650 மில்லியன் ஒதுக்கீடு செய்து விட்டோம். அதை தேயிலை சபைக்கு தந்து, அங்கேயுள்ள இன்னொரு ரூ. 650 மில்லியனையும் சேர்த்து, மொத்தம் 1,300 மில்லியன் ரூபாயை, தொழிலாளரின் சம்பள கொடுப்பனவுக்கு ஒதுக்கீடு செய்ய முயன்றோம்.
“எல்லாம் கூடி வரும் வேளையில் நவீன் மீண்டும் இதை முடியவே முடியாது என்று தடுத்தார்.
“நவீனுக்கு தேயிலை, இறப்பர் தோட்டங்களின் உழைக்கும் தமிழ் தொழிலாளி என்றால் ஏன் இப்படி வெறுப்பு வருகிறது என பகிரங்கமாக நானும், திகாம்பரமும் அமைச்சரவையில் சத்தம் போட்டது எனக்கு இப்போதும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது.
“நானும், திகாவும் அன்று சண்டையிட்டு அமைச்சரவையிலிருந்து வெளியேற முயல, சக அமைச்சர்களும், ரணிலும் எம்மை பொறுமை காக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.
“அமைச்சரவையில், அன்றைய ஜனாதிபதி மைத்திரி, அமைச்சர்கள் சஜித், மலிக், ராஜித, கிரியல்ல, சம்பிக்க உட்பட பலர் எங்களுக்கு சாதகமாக குரல் கொடுத்தார்கள். ஆனால், பிரதமர் ரணில், நவீன் திசாநாயக்கவை கண்டித்து, கறாராக பேசி, பிரச்சினையை தொழிலாளருக்கு சாதகமாக முடிக்க, முன்வரவில்லை.
“பிறகு அமைச்சரவை முடிந்து, ரணிலின் அலரி மாளிகை அலுவலகத்துக்கு சென்றோம். அங்கு நவீன் வருவார் என ரணில் சொன்னார். ஆனால், நாம் நீண்ட நேரம் காத்திருந்தும், நவீன் வரவேயில்லை.
“ரணில் விக்கிரமசிங்கவின் மீது, தமிழ் முற்போக்கு கூட்டணி நம்பிக்கை இழக்க இதுவே ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ஆகவே, நாம் மலையகத்தை பல விடயங்களில் தேசிய அரங்கில் தூக்கி நிறுத்தினோம். சம்பள விடயத்தில் முயற்சி செய்தோம். சண்டையிட்டோம். சரிவரவில்லை. அதற்காக வருந்துகிறோம். ஆனால், அன்றைய தவறு, இன்றைய தவறுக்கு சமனாகி விடாது.
“இன்று கொரோனா காரணத்தை காட்டி, ஆயிரம் ரூபாவை நிறுத்த முடியாது. உண்மையில் நாடெங்கும் கொரோனா காரணமாக தரும் நிவாரணம் கூட மலையக தமிழ் மக்களுக்கு ஒழுங்காக கிடைக்கிறதா? இதுபற்றி நான் கட்சி தலைவர் கூட்டத்தில் உரக்க சொல்லியும், முறைப்படி கிடைக்காமல் ஓரவஞ்சனைதான் நடக்கிறது.
“ஆகவே, உண்மையில் இப்போதுதான் கட்டாயம், உறுதியளித்தபடி, அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் தேவை” என்று அந்த பேஸ்புக் பதிவில் அவர் மேலும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago