2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

’1,000 வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் சிக்கல்’

ஆ.ரமேஸ்   / 2020 ஜூன் 28 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, 1,000 ரூபாய் சம்பளம் வழங்குவதற்கு, முதலாளிமார் சம்மேளம் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் சிக்கல் காணப்படுவதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பொகவந்தலாவையில், நேற்று (27) நடைபெற்ற இ.தொ.காவின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேயிலைத் தோட்டங்களில் கொய்யப்படும் தேயிலைக்கு மேலதிகமாக, இரண்டு கிலோகிராம் அதிகரிக்கப்படல் வேண்டும் என்றும் இறப்பர் தோட்டங்களிலும் மேலதிகமாக 2 கிலோகிராம் அதிகரிக்கப்படல் வேண்டும் என்றும் முதலாளிமார் கோருவதாக அவர் கூறினார்.

இந்தத் தொகை தொடர்பாக தொழிலாளிகளுக்கும் தோட்டத் துறைமார்களுக்கும் மாத்திர​மே சரியாக தெரியும் என்பதால், அடுத்த மாதம் முதல்வாரம், மூன்றாம் வாரங்களில் கலந்துரையாடலை நடத்தி முடிவெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

1,000 ரூபாய் கிடைக்கிறது என்பதற்காக, தொழிலாளர்களை கஷ்டத்துக்குள் தள்ளிவிடமுடியாது என்று தெரிவித்த அவர், திடீர் முடிவுகளை எடுத்து கையொப்பங்களை இட முடியாது என்றும் ஆனால், தொழிலாளர்களாகிய நீங்கள் கையொப்பம் இடுமாறு பணித்தால், தான் இடுவதற்குத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

எனினும் இதன்போது கையொப்பம் இடவேண்டாம் என்று, ஆதரவாளர்கள் மத்தியில் கோஷம் எழ ஆரம்பித்தது.

கூட்டு ஒப்பந்தம் என்பது, கம்பனிகளைக் கட்டுப்படுத்துவதற்கு என்று தெரிவித்த அவர், ஆனால், இது குறித்து தெரியாதவர்கள், இது குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும் கூறினார்.

அத்துடன், காலத்துக்குக் காலம், சம்பளப் பிரச்சினைக்காக போராடுவதை விட, இரண்டு வருடங்களுக்குள், தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பதே, தனது தந்தையின் கனவு என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .