Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 15 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
மலையக மக்கள் செறிவாக வாழக்கூடிய மத்திய மாகாணத்துக்கு என வழங்கப்பட்டுள்ள தமிழ் கல்வி அமைச்சு மத்திய மாகாணத் தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றக்கூடிய பணிகளை விடுத்து கட்சி அரசியலை முன்னெடுப்பதிலேயே அதிக அக்கறை காட்டி வருவதாக தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் குற்றம் சுமத்தியுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆசிரியர் இடமாற்றங்கள் பதவியுயர்வுகள் வழங்குவதில் நிலவும் குளறுபடிகள் தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
மலையக மக்கள் செறிவாக வாழக்கூடிய மத்திய ஊவா மாகாண சபைகளுக்கு கீழாக வேறு எந்த துறைக்குமென அல்லாது தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு என கல்வி அமைச்சு ஒன்று உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. திறனற்ற செயற்பாடுகளால் ஊவா மாகாணத் தமிழ்க் கல்வி அமைச்சு எமது கையை விட்டுச் சென்று பல வருடங்களைக் கடந்து விட்டன. இன்று மத்திய மாகாணத் தமிழ்க் கல்வி அமைச்சு செயற்படும் விதத்தைப் பார்க்கும் போது ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சுக்கு ஏற்பட்ட நிலை மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சுக்கும் ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் நிலவுகின்றது.
ஆரம்ப காலத்தில் இருந்தே இந்த அமைச்சில் அரசியல் தலையீடுகள் இருந்து வந்தபோதும், கடந்த பொதுத் தேர்தலோடு முற்றுமுழுதாக அரசியல் மயப்படுத்தப்பட்ட கட்சி சார்ந்த அமைச்சாக அதன் செயற்பாடுகள் மாற்றம் அடைந்து வருவதாக பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தை விட குறைவான தமிழ் சனத்தொகை கொண்ட கண்டி , மாத்தளை மாவட்டங்களில் தேசிய பாடசாலைகள் உருவாக்கப்பட்டபோதும் கூட நுவரெலியா மாவட்டத்தில் ஒரு தமிழ் மொழிமூல பாடசாலை கூட தேசிய பாடசாலையாக தரமுயரத்தப்படவில்லை. இது மத்திய மாகாண கல்வியமைச்சு தமது கட்சி சார்ந்த அதிகார பிடியில் பாடசாலைகளையும் அதிபர்களையும் ஆசிரியர்களையும் வைத்துக்கொள்ளும் உள்நோக்கம் கொண்டதாகும்.
கடந்த பொதுத் தேர்தலில் பாடசாலை நேரங்களில் அதிபர்களும் ஆசிரியர்களும் தேர்தல் பிரசார வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்டனர். அதேநேரம் தமக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தம் காரணமாக கட்சி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட நேர்ந்த பல அதிபர்கள் ஆசிரியர்கள் இன்று கட்சி சார்பானவர்களாக மாறி செயற்பட வேண்டியவர்களாக மாறிப் போயுள்ளனர். மத்திய மாகாணத் தமிழ்க் கல்வியமைச்சர் ஒரு பிரதியமைச்சர் போலவும் அதற்கான பிரதான அமைச்சராக மத்தியில் உள்ள கால்நடை, கிராம அபிவிருத்தி அமைச்சரே செயற்படுவதாகவுமே தெரிகிறது. அதிபர், ஆசிரியர்கள் இடமாற்றத்தில் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் தலையிடுவது நகைப்புக்குரியது மட்டுமல்ல வேதனைக்கும் உரியதுமாகும். மலையக கல்விக்கு வரப்பிரசாதமாக கிடைத்த அரிய வளங்களும் மூலங்களும் தனிப்பட்ட கட்சி சார்ந்த நலன்களுக்கு பயன்படுத்தப்படுவது மலையகத்தில் வளர்ந்து வரும் கல்வித்துறைக்கு பாரிய சவாலாக அமைந்துவிடும்.
தொழிலாளர்களைப் போன்று ஆசிரியர்களும் கட்சி, அரசியல் மயப்படுவது ஆரோக்கியமானதல்ல. அமைச்சர்களின் ஆள் மாற்றத்துக்கு ஏற்ப தாங்களும் தம்மை மாற்றிக்கொள்ளக் கூடாது. கல்வித்துறையினர் அரசியலில் ஈடுபடலாம். ஈடுபடவும் வேண்டும். அது ஒட்டுமொத்த மக்களுக்கான தூரநோக்க அரசியல் இலக்குகளை அடைவதற்கானதாக இருத்தல் வேண்டும். தமது பதவிகளை தக்கவைத்து கொள்வதற்கான கட்சி சார்ந்ததாக இருந்துவிடக்கூடாது.
மலையகத்தில் கட்சி அரசியல் மயப்படுப்படுத்தப்பட்ட பாடசாலை நிர்வாகங்களுக்கு எதிராக பெற்றோர்களும் பழைய மாணவர்களும் தற்போது கிளர்ந்தெழத் தொடங்கிவிட்டனர். இந்தப் போக்குகள் பாடசாலைகளின் நாளாந்த நிர்வாகத்தில் இடையூறாக மாறுகின்ற சந்தர்ப்பத்தில் இறுதியாக பாதிக்கப்படப்போவது மாணவர் சமூகமே. எதிர்கால மலையகமே. நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் நிலவும் கட்சி அரசியல் செயற்பாடுகள் தொடருமானால் அதற்கெதிராக மக்களை அணிதிரட்டி வீதியில் இறங்கி போராட தயங்கமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago