Sudharshini / 2015 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
'கூட்டுஒப்பந்தம் என்ற அடிமை சாசனத்தை அகற்றி, வருடா வருடம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரவு-செலவு திட்டத்தின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கும் முறைமையை நடைமுறைப்படுத்த ஆவண செய்வேன்' என ஐக்கிய தேசியக் கட்சியின்; பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பதுளை, மடுல்சீமை, தெல்பத்தை, நாயபெத்தை ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'நாடாளுமன்றத்துக்கு நான் தெரிவு செய்யப்படும் பட்சத்தில், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்தும் உதவி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் நன்மை கருதி 'உதவி' என்பதை அகற்றி அனைவரும் ஆசிரியர்கள் என்ற நிலையை ஏற்படுத்துவது தொடர்பாகவும் தனி நபர் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பேன்.
மேற்படி இரு பிரேரணைகளையும் தனி நபர் பிரேரணைகளாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும்; பெற்று, அப்பிரேரணைகளை நிறைவேற்றிக்கொள்வேன். இவற்றை நாடாளுமன்ற முதல் அமர்விலேயே செயல்படுத்துவேன்.
பதுளை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவங்களை ஏற்படுத்துவதென்றால் ஐ.தே.க மூலமாகவேதான், அது சாத்தியமாகும். தற்போதைய நிலையில் ஐ.தே.க சார்பாக இருவர் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. அவ்வெற்றி அமோக வெற்றியாக அமைய வேண்டுமென்பதற்காகவே பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றோம்.
எமது மாகாண முதலமைச்சராக இருந்து வரும் ஹரின் பெர்ணான்டோ எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார். அவர் இனவாதமற்றத் தலைவராக இருந்து வருவதினால், அவருடன் இணைந்து செயல்படுவது எமக்கு பெருமையாக உள்ளது. அவரது வெற்றியுடன், தமிழ் வேட்பாளர்கள் இருவரது வெற்றியையும் உறுதிபடுத்தும் வகையிலேயே அவரது வேலைத்திட்டங்கள் அமைந்துள்ளன.
எமது கட்சிக்குள்ளிருந்துக்கொண்டே, எம்மவர் ஒருவர் பதுளை மாவட்ட தமிழ் வேட்பாளர்கள் இருவரது வெற்றியை தடுக்கும் வகையில், எமக்கு வாக்களிக்காமல், அவ்வாக்குகளை பெரும்பான்மை சமூகததுக்கு அளிக்கும்படி கோரிவருகின்றார். அவரின் சமூகத்துரோக செயல்பாடுகளை எமது மக்கள் கண்டிக்கத் தொடங்கியுள்ளனர்.
எம்மிருவரது வெற்றி தடுக்கப்பட்டால்தான் குறிப்பிட்ட நபருக்கு வாய்ப்பு கிடைக்குமென்று அவர் எதிர்பார்க்கின்றார். அவ் எதிர்ப்பார்ப்பு இழவு காத்த கிளியை போலாகும்.
எமது மக்கள் இத்தகைய சமூகத்துரோகிகளை இனங்கண்டு, ஐ.தே.க.வின் பதுளை மாவட்ட தமிழ் வேட்பாளர்கள் இருவரையும் அமோக வெற்றியடைய வைக்க வேண்டும். இவ்வெற்றியின் மூலமே, எமது சமூக எதிர்காலம் தங்கியுள்ளது' என்றார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago