2026 மே 05, செவ்வாய்க்கிழமை

பாசிச சக்திகளை தோற்கடிக்கவும்

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

'மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான  பேரினவாத சக்திகளையும் ரணில் தலைமையிலான   சக்திகளையும் ஒரேயடியாக  சமகாலத்தில் மக்கள் தோற்கடிக்க முடியாததால், தற்காலத்தில்  ஒப்பீட்டளவில் பிரதான எதிரியாக இருக்கும் மஹிந்த தலைமையிலான  பேரினவாத, சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியமாகும்' என இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் தெரிவித்துள்ளது.

'அதற்காக மக்கள் அவர்களது வாக்குகளை பயன்படுத்த வேண்டும். அத்துடன் தொழிலாளர்கள், விவசாயிகள், ஒடுக்கப்படும்  தேசிய இனத்தவர்கள்  அவர்களின் உரிமைகளை  வென்றெடுக்கவும் நாட்டு மக்களின் ஐக்கியத்துக்கு  பாதிப்பாக இருக்கும்  தேசிய  இனப்பிரச்சினைக்கு  அரசியல் தீர்வு காணவும்  தேவையான ஜனநாயக இடைவெளியை வென்றெடுக்கவும், பாதுகாக்கவும் மக்கள் அவர்களது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்' என்றும் கோரியுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் அக்கட்சிவெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.   இக்கட்சியின்  இடையேற்பாட்டுக் குழுவின் இணை அழைப்பாளர்களான  டபிள்யூ.சோமரட்ன,  இ.தம்பையா ஆகியோர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பின் காலனித்துவ காலத்திலிருந்து இலங்கையில் இருந்துவந்த  குறைந்தபட்ச முதலாளித்துவ ஜனநாயகத்தையும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம்  முற்றாக  இல்லாமலாக்கியது. அந்த ஜனநாயகமும்  இல்லாத சூழலில்  அவரின் மீது அதிருப்தியடைந்தவர்களாலோ, அவருக்கு பதிலாக ஆட்சியை கைப்பற்ற எண்ணம் கொண்டிருந்தவர்களாலோ  அவரை பதவி நீக்கம் செய்ய முடியவில்லை.

பல்லாயிரக்கணக்கானோர்  கொல்லப்படவும் காணாமல் போகவும் இலட்சக்கணக்கானோர் அகதிகளாகவும்  காரணமான  யுத்தத்தை அவர் ஈவிரக்கமின்றி நடத்தினார். அரசியல் பழிவாங்கல் உச்சமாகியதுடன் தென்னிலங்கையில் பலர் காணாமல் போயினர். அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினர்.  போதைப்பொருள் போன்ற சமூக விரோத வர்த்தகங்கள்  பல்கிப் பெருகின. ஆட்சியாளர்கள் அவற்றில் சம்பந்தப்பட்டிருந்தனர்.  சட்டத்துறை, நிறைவேற்றுத் துறை, நீதித்துறையிலும் பாசிசம் மேலோங்கியது. தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் ஓரம்கட்டப்பட்டனர்.

அழிவுகளுக்கு காரணமான மஹிந்த ஜனவாரி 8ஆம் திகதி, ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். ஆனால் அவர் ஆறு மாதங்களுக்குள் தன்னை தகவமைத்துக் கொண்டு நாட்டின் பிரதமராகும்  எண்ணத்தில்  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றார். இதற்கு அவரின் பேரினவாதம் மட்டும் கைகொடுத்தது என கூறமுடியாது. ஊழல் மோசடியூடாக சம்பாதித்து கொண்டுள்ள பணம், மாபியா பணக்காரர்கள், சர்வதேச  தேசிய மாபிய வலைப் பின்னல்கள் போன்றனவும், சீரழிந்த  ஆபிரிக்க சர்வதிகார நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பியா தவிர்ந்த சீனா போன்ற ஏனைய நவதாராளவாத ஏகாதிபத்திய சக்திகளும் அவருக்கு கைக்கொடுக்கின்றன.

எனவே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பேரினவாத, பாசிச, நவபழமைவாதம் தோற்கடிக்கப்பட்டு தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அடக்கப்படும் தேசிய இனங்களும், பிரிவினர்களும் ஐக்கியப்பட்டு புதிய அரசியல் பண்பாட்டை நிலைநாட்ட தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு காணப்படக் கூடிய சூழலை உருவாக்க சரியான முடிவை எடுத்து செயற்பட வேண்டும்.

அடக்கப்படும் தமிழ், முஸ்லிம், மலையக தேசிய இனங்கள் நாடளாவிய ரீதியில்  பேரினவாத பாசிச நவபழைமைவாதத்தை தோற்கடிக்கவும் நியாயமான அரசியல் தீர்வை வென்றெடுக்க குறிப்பாக வாக்குகளை பயன்படுத்த வேண்டும். தமிழ் தேசியம் உட்பட அடக்கப்படும் தேசிய இனங்கள் அவற்றின் நியாயமான கோரிக்கையை முன்னெடுத்து போரட முனையும் நேர்மையான சக்திகளை பலப்படுத்தவும் பேரினவாதத்தை தோற்கடிக்கவும் வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .