2025 மே 12, திங்கட்கிழமை

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 21ஆவது சிரார்த்த தினம் இன்று

Kogilavani   / 2020 ஒக்டோபர் 30 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிறுவுனர் மறைந்த தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 21ஆவது சிரார்த்த தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் அரசியல் வாழ்க்கைப் பற்றிய சிறு குறிப்பு

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், 1930களில் தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்திருந்தார். 1930களின் ஆரம்ப காலப்பகுதியில் ஹட்டன் நகரில் காந்தி சேவா சங்கம் இயங்கி வந்தது. அந்தச் சங்கத்தின் கூட்டமொன்றுக்கு, சௌமியமூர்த்தி தொண்டமானை அழைத்தனர். இவ்வாறே அவரது அவரது அரசியல் பயணம் ஆரம்பமாகியது. 

ஜூலை 24, 1939இல் சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆலோசனைகளுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்ட இலங்கை - இந்திய காங்கிரஸின் கம்பளைக் கிளையின் தலைவராக அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், 1939 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கையில் 1930களின் கடைசி பகுதியில் ஏற்பட்ட இந்திய எதிர்ப்பு அலைகள் காரணமாக அதிகளவான தோட்டத் தொழிலாளர்கள் இலங்கை இந்திய காங்கிரஸில் இணைந்தனர்.

இதனால் அவர்களது பிரச்சினைகளைப் பேச வேண்டிய தேவை இலங்கை இந்திய காங்கிரஸுக்கு ஏற்பட்டது. ஆனால் இலங்கை - இந்திய காங்கிரஸ், இந்திய தொழிலாளரது பிரச்சினைகளை தோட்ட நிர்வாகத்திடம் கொண்டு சென்றபோது அவர்கள் அரசியல் கட்சியுடன் பேச மறுத்தனர். மாறாக தொழிற்சங்கத்துடன் மட்டுமே பேச முடியுமென வாதிட்டனர்.

இதனால் 1940 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை - இந்திய காங்கிரஸின் தொழிற்சங்க கிளை ஆம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்பத் தலைவராக சௌமியமூர்த்தி தொண்டமானும்  அப்துல் அஸீஸும் தெரிவுசெய்யப்பட்டனர். 1940 ஆம் ஆண்டு செப்டெம்பர் 7 - 8 இல், இலங்கை - இந்திய காங்கிரஸின் தொடக்க விழாவை சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமை தாங்கி நடத்தினார். 

இந்நிகழ்வே அவரது வாழ்வின் முதலாவது பிரதான அரசியல் நிகழ்வாகும்.
1945ஆம் ஆண்டு, நுவரெலியா பொதுக்குழுவில் இலங்கை - இந்திய காங்கிரஸினதும் அதன் தொழிற்சங்கத்தினதும் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டார்.

1947 இல் 95 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக  பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இலங்கை - இந்திய காங்கிரஸ் எட்டு ஆசனங்களுக்குப் போட்டியிட்டு ஏழு இடங்களைக் கைப்பற்றியது. சௌமியமூர்த்தி தொண்டமான் நுவரெலியா தொகுதியில்  போடியிட்டு, வெற்றிபெற்றார்.  

இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தின் பிரதமரான டி.எஸ். சேனநாயக்க, இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின்போது, இலங்கை வந்து குடியேறிய இந்திய பாகிஸ்தானிய மக்களது குடியுரிமையைப் பறிக்கும் சட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றினார். 

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அதற்கு எதிராக நாடாளுமன்றில் வாதிட்டும் பலனற்றுப் போனது. குடியுரிமையைப் பறித்த பின்னர் டி.எஸ்.சேனநாயக்க 'இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம்-1949' என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்தார். இதன்படி இலங்கை குடியுரிமையைப் பெற பல தகைமைகள் முன்மொழியப்பட்டிருந்தது.

இது சரியான சட்டமாக தெரிந்தாலும் பல நடைமுறைச் சிக்கல்களைக் கொண்டிந்தது. இதனால் அச்சிக்கல்களைச் சுட்டிக்காட்டி அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் நாடாளுமன்றத்தில் அதனை எதிர்த்தார்.

இலங்கை - இந்திய காங்கிரஸின் மத்தியக் குழு, யாரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கக்கூடாது என தீர்மானித்தது. இதன்படி பெரும்பான்மையான இந்தியர்கள் விண்ணப்பிக்கவில்லை. டி. எஸ். சேனநாயக்கவின் மரணத்துக்குப் பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இதன்போது இந்தியர்கள் குடியுரிமை அற்றவர்களாக இருந்தபடியால் சௌமியமூர்த்தி தொண்டமானும் ஏனைய ஆறு பிரதிநிகளும் மீண்டும் நாடாளுமன்றம் செல்ல முடியவில்லை.

ஏப்ரல் 28, 1952இல், அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கைவாழ் இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்குமாறு பேரணியொன்றையும் சத்தியாக்கிரகம் ஒன்றையும் நடத்தினார்.

ஏப்ரல் 29, 1952இல் அஸிஸுடன் இணைந்து பிரதமரின் அலுவலக அறைக்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார். பல சிக்கல்களுக்கு மத்தியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். பல சந்தர்ப்பங்களில் பொலிஸார் அவரை பலவந்தமாக சத்தியாக்கிரக இடத்தில் இருந்து வெளியேற்றினாலும் மீண்டும் அவ்விடத்துக்குத் திரும்பினார். நாடாளுமன்றம் முன்பாகவும் தமது அஹிம்சை போராட்டத்தைத் தொடர்ந்தார்.

இப்போராட்டங்கள் காரணமாக அரசாங்கம்,  இந்தியர்களை மீண்டும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கக் கோரியது. இதன்போது, 850,000 பேர் குடியுரிமைக்காக விண்ணப்பித்தனர்.
பல போராட்டங்களின் பின்னர் மலையக மக்களுக்குக் குடியுரிமையைப் பெற்றுத்தந்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்,  மீண்டும் 1977ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவானதுடன், அவர் மரணிக்கும்வரை (1999)  ஆளும் அரசாங்கங்களில் முக்கிய அமைச்சுப் பதவிகளையும் வகித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்தன, ஆர்.பிரேமதாஸ, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகிய நான்கு ஜனாதிபதிகளின் கீழ் அமைச்சுப் பதவிகளை வகித்த சௌமியமூர்த்தி தொண்டமான், மலையக மக்களை இந்த நாட்டின் தேசிய நீரோட்டத்துக்குக்  கொண்டுவந்த மாபெரும் தலைவராவார்.

மலையக மக்களுக்கு எதிராக இன வன்முறைகள் கட்டவிழ்த்துவிட்ட சந்தர்ப்பங்களில் மக்களோடு மக்களாக நின்று அவற்றைத் தடுத்து நிறுத்தினார்.

அமரர் செயமியமூர்த்தி தொண்டமான் மறைந்தாலும் அவர் காட்டிய வழியில் இ.தொ.கா.  பயணித்து வருவதாக,  இ.தொ.காவின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X