2025 மே 05, திங்கட்கிழமை

“அரச பெருந்தோட்ட நிறுவனங்களை தனியார்மயப்படுத்த இடமளியோம்”

Janu   / 2024 ஜனவரி 10 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச பெருந்தோட்ட நிறுவனங்களை தனியார்மயப்படுத்த  இடமளிக்கமாட்டோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் பெருந்தோட்ட யாக்கம், எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் உள்ளிட்ட அரச பெருந்தோட்ட நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மேற்படி நிறுவனங்களின் நிர்வாகத்தின் கீழ் தொழில் செய்யும் தொழிலாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து  தெரிவிக்கும்போதே பாரத் அருள்சாமி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, "அரச பெருந்தோட்ட யாக்கத்தை  தனியார் மயப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நகர்வு தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மக்கள் மத்தியிலும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், சேவைகால கொடுப்பனவு உட்பட தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைகளை மேற்படி நிறுவனங்கள் இன்னும் செலுத்தி முடிக்கவில்லை. அத்துடன், தொழிலாளர்களிடம் இருந்து அறவிடப்பட்ட ஏனைய கொடுப்பனவுகளுக்கும் என்ன நடக்கும் என்பது தெரியவில்லை.

எனவே, கொடுப்பனவுகள் எல்லாம் செலுத்தப்பட்டு முறையான - நிலையான தீர்வு கிடைக்கும்வரை அரச பெருந்தோட்ட நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டோம். தொழிலாளர்களுக்கு சகலவிதமான ஏற்பாடுகளும் கிடைக்கப்பெறும் வரை ஓர் அங்குளமேனும் கை வைக்க இடமளிக்கமாட்டோம் என்றார்..

அத்துடன், வீடு அமைப்பதற்கான காணி, விவசாயத்துக்குரிய காணி என்பனவும் உறுதி செய்யப்பட வேண்டும். இதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இது சம்பந்தமாக ஜனாதிபதி, பெருந்தோட்ட அமைச்சர், நிதி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட தரப்பினருக்கும் அறிவிக்கவுள்ளோம்." என தெரிவித்துள்ளார்.

எஸ்.கணேசன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X