2025 மே 12, திங்கட்கிழமை

’அரவிந்தகுமாரின் தீர்மானம் தனிப்பட்ட தீர்மானம்’

Kogilavani   / 2020 ஒக்டோபர் 23 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்த மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவரும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அ.அரவிந்தகுமாரின் தீர்மானமானது, அவருடைய தனிப்பட்ட தீர்மானமாகும் என்றும் அது மலையக மக்கள் முன்னணியின் தீர்மானம் இல்லை என்றும் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் எஸ்.விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று (22) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், 

'20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி அவர்களுடைய தீர்மானத்தின்படி எங்களுடைய மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் செயற்படுவார்கள் என நாங்கள் தீர்மானித்திருந்தோம்.

'அந்த அடிப்படையில் கொழும்பில் நடைபெற்ற தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கலந்துரையாடலின்போது 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிப்பது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, மலையக மக்கள் முன்னணியின் அரசியல் துறை தலைவரும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அ.அரவிந்தகுமார் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.

'குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பது தொடர்பாக கட்சி உயர்பீடத்துடனோ அல்லது கட்சியின் தலைமைத்துவத்துடனோ எந்தவிதமான கலந்துரையாலையும்  ; அவர் மேற்கொள்ளவில்லை. எனவே இது அவருடைய தனிப்பட்ட தீர்மானமாகும். கட்சியின் தீர்மானம் அல்ல.

'மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு, திங்கட்கிழமை (26) ஹட்டன் தலைமையகத்தில் கூடி  அனைவருடைய கருத்தையும் அறிந்துகொண்டு இது தொடர்பாக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளும். எனவே ஒரு சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் பிழையானது என்பதையும் இதன்போது சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X