2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வீதியை புனரமைக்கக் கோரிக்கை

Editorial   / 2018 ஜூன் 06 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்

கண்டி - வத்தேகம நகரில் இருந்து பன்விலை ஊடாக கோமரை, கபரகலை செல்லும் பிரதான வீதி, நீண்டகாலமாகம் திருத்தி அமைக்கப்படாமலும் அகலப்படுத்தப்படாமலும் காணப்படுவதோடு, வீதியின் பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாகக் காணப்படுவதால், இவ்வீதியைப் பயன்படுத்தும் சுமார் 15,00க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வத்தேகம பிரதேசத்தை அண்மித்த பிடியேகெதர, வாவின்ன, கல்பீலி, பன்விலை, றக்சாவ, ஆத்தளை, மடுல்கலை, மாவுசா, கலாபொக்க, டீமலை, கலகிரிய, கபரகலை, சென் ஜோன்ஸ், அரத்தனை, ஹுலுகங்கை, ஹாகலை, தவலந்தன்னை, நக்கிள்ஸ், பெத்தேகம, கோமரை, பம்பரல்லை போன்ற பிரதேசங்களில் வாழும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இந்த பிரதான வீதியையே, தமது அன்றாடப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.

காட்டு வழியாக வளைவுகள் அதிகமாகவும் மலைத்தொடர்கள் நிறைந்ததாகவும் ஒடுங்கிய ஆபத்தான வீதியாகவும் காணப்படும் இந்த வீதி, போக்குவரத்துக்குக் கடினமான ஒன்றாக மாறியுள்ளதென, பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் சிறிய திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வீதியை, கார்பட் இட்டு அகலப்படுத்தித் தருமாறு, அரசியல்வாதிகளுக்கும் உரிய அதிகாரிகளுக்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கைகளை பல்வேறு தரப்பினரும் காலத்துக்குக் காலம் விடுத்திருந்த போதும், இன்று வரை மக்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, பிடியேகெதர பகுதிக்கு விஜயம் செய்த போது, வீதியின் மிகச்சிறிய பகுதியில் கார்பட் இடப்பட்டதெனவும், மேலும் பன்விலை பகுதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருகைதந்த போது, ஹெலிகொப்டர் மூலமே பயணத்தை மேற்கொண்டிருந்தாரெனவும், இதனால் இவ்வீதியின் உண்மை நிலை, அரசியல் பிரமுகர்களுக்குத்தெரிய வாய்ப்பில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X