2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

இடைவிலகிய மாணவர்களைக் கண்டறிவதற்காக பொலிஸ் குழு கணக்காணிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெருந்தோட்டப் பகுதிகள் மற்றும் கிராமங்களில், பாடசாலைகளுக்குச் செல்லாது வீடுகளில் இருக்கும் மாணவர்களையும் பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்களையும் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பாடசாலைகளில் இணைப்பதற்கான வேலைத்திட்டமொன்றை, கந்தப்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த வேலைத்திட்டத்துக்காக, கந்தப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அசோக்க ரணபாகு தலைமையிலான மூவரடங்கிய பொலிஸ் குழுவொன்று, களத்தில் நின்று செயற்பட்டு வருகின்றது.

மேற்படி குழு, கடந்த 8ஆம் திகதி முதல் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் பயனாக, இதுவரை ஆறு மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்கள், சீருடைகள் என்பவற்றை, கந்தப்பளை நகர வர்த்தக சங்கம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பெற்றுக்கொடுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கந்தப்பளை - பாக்குத் தோட்டம், கல்பாலம் கிராமம், கொங்கோடியா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த மாணவர்களே, இவ்வாறு பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் நான்கு மாணவர்களுக்கு, பிறப்பத்தாட்சிப் பத்திரம் இருக்கவில்லை என்றும் மேலும் இரு மாணவர்கள், தாயின் அரவணைப்பில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களென்றும், மேற்படி குழுவினர் முன்னெடுத்த விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிறப்பத்தாட்சிப் பத்திரம் இல்லாத மாணவர்களுக்கு, உரிய ஆவணங்களைப் பெற்றுக்கொடுத்துள்ள பொலிஸார், குறித்த ஆறு மாணவர்களையும், அவர்கள் கல்வி கற்று விலகிய கந்தப்பளை மெதடிஸ்த கல்லூரி மற்றும் மஹிந்த மகா வித்தியாலயம் ஆகியவற்றில், இன்று (16) காலை மீண்டும் இணைத்துள்ளனர்.

கந்தப்பளை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி சந்திரிகா குணசேகர, மேற்படி மாணவர்களை பாடசாலைகளுக்கு நேரடியாக அழைத்துச் சென்று, பாடசாலை அதிபர்களினூடாக வகுப்புகளில் இணைத்துள்ளார்.

கந்தப்பளை பொலிஸ் பிரிவில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் சிறுவர்களில் 45 சதவீமானவர்கள், பாடசாலைக் கல்வியைத் தொடராது உள்ளனரென்றுத் தெரிவித்த கந்தப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அசோக்குமார் ரணபாகு, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைவாக, இடைவிலகிய மாணவர்களை, பாடசாலைகளில் மீண்டும் இணைக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை, தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .