2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இந்திய அரசாங்கத்தின் இலவச வீடுகள் விரைவில் பூர்த்தி செய்யப்படவுள்ளன

Editorial   / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -ஸ்ரீ சண்முகநாதன்

இந்திய அரசாங்கத்தினால், மலையக மக்களுக்கு முதற்கட்டமாக கட்டிக்கொடுக்க முன்வந்த 5000 இலவச வீடுகளில், 3000 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனையவை விரைவில் பூர்த்தி செய்யப்படவுள்ளன என, கண்டி இந்திய உதவித் தூதுவர் திரேந்திர சிங் தெரிவித்தார். இதேவேளை, இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது, உறுதியளிக்கப்பட்ட, 10000 வீடுகளையும் சேர்த்து, மொத்தமாக 15000 வீடுகள், இந்திய அரசாங்கத்தினால், மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மஸ்கெலியா லக்கம் பிரதேசத்தில் இயங்கி வரும், ‘அபிவிருத்திக்கான வலுவூட்டல்’ நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ‘முதல்வன்’ சஞ்சிகையின் வெளியீட்டு விழா, அதன் முகாமையாளர் கந்தையா விக்னேஸ்வரன் தலைமையில், லக்கம் தமிழ் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்,

“இலங்கையில், நீண்ட காலமாக இடம்பெற்று வந்த யுத்தம், முடிவடைந்த பின்னர், வட மாகாணத்தில் வீடமைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுக்க இந்தியா முன்வந்து அதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், அந்த வசதிகளை மலையகத்தில் செய்து கொடுக்க உண்மையில் இந்தியா சிந்திக்கவில்லை.  அதன் பின்னர், மலையக மக்களின் நிலையை நன்கு உணர்ந்து வடக்கு, கிழக்கில் செய்து கொடுக்கும் வசதிகளை மலையகத்துக்கும் செய்து கொடுக்கத் தீர்மானித்தது.

“அதன் பயனாக மலையக மக்களுக்கு 5000 வீடுகளை இலவசமாகக் கட்டிக் கொடுக்க இந்தியா முன்வந்தது. அவற்றில் 3000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. எஞ்சியுள்ள 2000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வருடம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போது மலையகத்துக்கும் வருகை தந்திருந்தார். மலையக மக்களை நேரடியாக சந்தித்த அவர் மேலும் 10000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க உறுதியளித்துள்ளார். வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணிகளும், பயனாளிகளும் அடையாளம் காணப்பட்டு வருகின்றது. அத்தோடு, பாதை, சுகாதாரம் முதலான வசைதிகளைச் செய்து கொடுப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவில் கல்வி கற்க 700க்கும் மேற்பட்ட புலமைப் பரிசில் திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகின்ற நிலையில், இலங்கையில் க.பொ.த. உயர்தரம் மற்றும் உயர்கல்விக்காக மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கப்பட்டு வருவதாகவும், இந்தியாவில் கல்வி கற்பதற்கான புலமைப் பரிசிலையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பதோடு, விஞ்ஞான துறையில் பட்டப் படிப்பை மேற்கொள்ள மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்கு முகங் கொடுக்க வேண்டும்” என்றும் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, “விஞ்ஞான பாடத்தில், திறமையான சித்திகளைப் பெற்றுக் கொண்டுள்ள மாணவர்கள், இதற்கு விண்ணப்பித்து உயர்கல்வி வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும்” என்று கூறிய அவர், “இவை தொடர்பான விபரங்களை, இணையத் தளம் மற்றும் முகநூல் வாயிலாக கொழும்பு, கண்டி இந்தியத் தூதரகங்கள் பதிவிட்டு வருகின்றன” என தகவல் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X