2025 ஜூலை 07, திங்கட்கிழமை

உடனடி தீர்வு இல்லாவிடின் உயிரிழப்பு நிச்சயம்: வேலுகுமார்

Sudharshini   / 2015 நவம்பர் 12 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

கண்டி தும்பர சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மிகவும் மோசமாகவுள்ளது. இவர்கள் தொடர்பில் உடனடி தீர்மானம் மேற்கொள்ளாவிட்டால் உயிரிழப்பை தவிர்க்க முடியாது என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டி தும்பரயில் அமைந்துள்ள சிறைச்சாலைக்கு இன்று வியாழக்கிழமை (12) சென்று, தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அரசியல் கைதிகளில் 12 பேர் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் மலையகத்தைச் சேர்ந்த 8 பேரும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 4 பேரும் அடங்குகின்றனர்.

அனைவரும் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது பாரிய நம்பிக்கை கொண்டுள்ளனர். குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். தமது புனர்வாழ்வுக்கு அல்லது அரசாங்கம் குறிப்பிட்டது போல அரசியல் கைதிகளை விடுதலை செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தை நாங்கள் கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

எனவே, இவர்களின் விடயம் தொடர்பாக அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒருவரின் உயிர் பிரிந்த பின்பு எடுக்கப்படும் தீர்மானத்தில் எந்தவிதமான பயனும் இல்லை. இவர்கள், உள ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில கைதிகள் கதைக்க முடியாத நிலையில் இருக்கின்றனர். இந்த நிலை தொடருமானால் நிச்சயமாக உயிரிழப்பை தவிர்க்க முடியாது.

இவர்களை யுத்தக் களத்தில் வழி நடத்தியவர்கள் அனைவரும் வெளியில் இருக்கின்றார்கள். அப்படியிருக்க இவர்களை உள்ளே வைத்திருப்பதானது எந்த வகையில் நியாயமான விடயம் என புரியவில்லை.

எனவே, இவர்களின் விடுதலையை அரசாங்கம் கூறியது போல விரைவுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால் கடந்த மஹிந்த அரசாங்கத்துக்கும் நல்லாட்சி அரசாங்கத்துக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .