2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஏட்டிக்குப் போட்டியாக மேதினக் கூட்டங்கள்

Kogilavani   / 2017 மார்ச் 21 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி

மலையகத்தை பிரதிநித்துவப்படுத்தும் பிரதான தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம், ஆகியன, ஏட்டிக்குப் போட்டியான வகையில் மேதினக் கூட்டங்களை நடத்தவுள்ளன.

அந்தவகையில், இ.தொ.கா ஹட்டனிலும் கூட்டணிக் கட்சி தனது அங்கத்துவ தொழிற்சங்கங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மூன்று மாவட்டங்களிலும் மேதினக் கூட்டங்களை நடத்தவுள்ளது.

இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து, கொழும்பு கெம்பல் பாக்கில் மேதின கூட்டத்தை நடத்தவுள்ளது.

மூன்று இடங்களில் கூட்டணியின் மேதினக் கூட்டங்கள்
 
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மேதினக் கூட்டம், அதன் அங்கத்துவக் கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மூன்று இடங்களில் நடைபெறவுள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர், மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமான அ.லோரன்ஸ் தெரிவித்தார்.

இதற்கமைவாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பா.திகாம்பரத்தின் தலைமையில் நுவரெலியா மாவட்டத்திலும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவைரும் அமைச்சருமான மனோ கணேசன் தலைமையில் கொழும்பிலும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் பதுளை மாவட்டத்திலும் மே தினக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.

மேதின கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தொடர்பில், கூட்டணியின் அங்கத்தவர்கள் விரைவில் கூடி ஆராயவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

ஹட்டனில் இ.தொ.கா

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் 78வது மேதினக் கூட்டம், இம்முறை ஹட்டன் நகரில் நடைபெறவுள்ளது. இதுத் தொடர்பில் இ.தொ.காவின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

“இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் இ.தொ.காவின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக, இம்முறை ஹட்டன் நகரில் மேதினக் கூட்டம் நடைபெறவுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இ.தொ.கா வின் மேதினம், தொழிலாளர் வர்க்க சிந்தனையோடு, உணர்வுபூர்வமாக கொண்டாடப்படவிருக்கின்றது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 77 வருடங்களைக் கடந்த நிலையில், தனது 78ஆவது மேதினத்தை இம்முறை கொண்டாடவுள்ளது.

இம்மேதினக் கூட்டத்தில், இ.தொ.காவின் 48 காரியாலயங்களுக்குள் உட்பட்ட பிரதேசங்களிலிருந்து, தோட்டத் தலைவர்களும் பெண்கள் அமைப்பினரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

குறிப்பாக மலையக இளைஞர், யுவதிகளே, ஆயிரக்கணக்கில் பங்கேற்று, தமது உணர்வுபூர்வமான பங்களிப்பை நல்கவிருக்கின்றனர்.
இதற்கான அனைத்து ஒழுங்குகளையும் இ.தொ.காவின் உப தலைவர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அரசியல் அமைப்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தே.தோ.தொ சங்கத்தின் மே தினக்கூட்டம் கொழும்பில்

தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமானது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து, மேதினக் கூட்டத்தை கொழும்பு, கெம்பல் பிட்டியில் நடத்தவுள்ளதாக, அச்சங்கத்தின் பொதுச் செயலாளரும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
தொழிற்சங்கம் சார்பாக, 10,000 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .