2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

கூட்டொப்பந்தம் மீண்டும் கைச்சாதிடப்படாவிட்டால் “போராட்டம் வெடிக்கும்”

Kogilavani   / 2017 மார்ச் 29 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

“எதிர்வரும் 1 ஆம் திகதி, கூட்டொப்பந்தம் மீண்டும் கைச்சாத்திடப்பட்டு, தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவில்லை என்றால், அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கமானது, தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி, பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும்” என, அச்சங்கத்தின் தலைவர் ஜே.செல்வராஜா தெரிவித்தார்.

ஹட்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.அங்கு மேலும் கூறிய அவர்,

“1999 ஆண்டு முதல் இன்றுவரை, கூட்டொப்பந்தமானது  இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையே கைச்சாத்திடப்பட்டு வருகின்றது. 

ஆனால், தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் கூட்டொப்பந்தத்தை உரிய முறையில் கைச்சாத்திடுவதில்  பின்நிற்கின்றன. அந்த வகையில், 2015 மார்ச் 31ஆம் திகதி நிறைவடைந்த கூட்டொப்பந்தத்தை, அன்றே புதுப்பித்திருந்தால், 2017. 04.02 மீண்டும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2015ஆம் ஆண்டு முடிவடைந்த கூட்டொப்பந்தம் ஒன்றரை வருடங்களுக்கு பின்னரே, கைச்சாத்திடப்பட்து.

எது எவ்வாறாயினும் 2015 ஆம் ஆண்டுக்கு அமைய,  எதிர்வரும் 31 அல்லது 1ஆம் திகதி, கூட்டொப்பந்தத்தை மீண்டும் கைச்சாத்திட, தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் முன்வர வேண்டும்.

தொழிற்சங்கங்களால் தொழிலாளர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது.

முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கங்களும் கூட்டொப்பந்தத்தை செய்து, தொழிலாளர்களுக்கு முறையான சம்பளத்தை பெற்றுக்கொடுக்காத பட்சத்தில், அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிலாளர்களை ஒன்று திரட்டி பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது, கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும், அரசுக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அமையும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X