Editorial / 2026 ஏப்ரல் 07 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

நள்ளிரவில் நிகழ்ந்த கோர வாகன விபத்தில், படுகாயமடைந்த தனது பெற்றோரையும் சகோதரியையும் சாதூர்யமாகச் செயல்பட்டு காப்பாற்றிய 12 வயது சிறுவனின் வீரச்செயல் கொத்மலை, தவலந்தென்ன பகுதியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
கொத்மலை காமினி திஸாநாயக்க தேசிய பாடசாலையில் தரம் 6 இல் கல்வி பயிலும் கே. ஹிரந்த சமரகோன் என்ற சிறுவனே இந்த மீட்பு நாயகனாவான். இவனது குடும்பத்தினர் மற்றும் நண்பர் ஒருவர் வெலிமடையிலிருந்து நுவரெலியா ஊடாக தவலந்தென்ன நோக்கி வேன் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தனர்.
ரம்பொடை, கெரண்டி எல்லை பகுதியில் நள்ளிரவு வேளையில் இவர்களது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 120 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிறுவனின் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர் வாகன இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தனர். தானும் காயமடைந்திருந்த போதிலும், மனம் தளராத சிறுவன் ஹிரந்த, அங்கிருந்த மற்றொருவருடன் இணைந்து செங்குத்தான அந்தப் பள்ளத்திலிருந்து மேலே ஏறத் தொடங்கினான்.
பாறைகளையும், மரங்களையும், கொடிகளையும் பற்றிப் பிடித்தபடி மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அவர்கள் பிரதான வீதியை வந்தடைந்தனர்.
வீதியில் சென்ற வாகனங்களை நிறுத்த முயற்சி செய்த நிலையில், நீண்ட நேரத்தின் பின் லொறி ஒன்று நிறுத்தப்பட்டது. லொறியில் இருந்தவர்களிடம் விபத்து குறித்து விளக்கியதையடுத்து, அவர்கள் உடனடியாக கொத்மலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிஸார் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு லொறி மூலம் கொத்மலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
சிறுவன் ஹிரந்த நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளான். ஆபத்தான கட்டத்தில் பதற்றமடையாமல் செயல்பட்டு, தனது குடும்பத்தாரை மரணத்தின் பிடியிலிருந்து மீட்ட சிறுவனின் வீரத்தையும், நேரக்காலத்துடன் எடுத்த முடிவையும் கொத்மலை பொலிஸார், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
9 minute ago
16 minute ago
17 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
17 minute ago
33 minute ago